சாமி காவியவருக்குக் காய்ச்சல்! வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்குச் சீல்? (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவிட் – 19 நடவடிக்கைக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

எனினும் பூஜை நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சால் வழங்கபப்ட்ட அறிவுறுத்தலுக்கு அமைய 50 அடியவர்களே வழிபாடுகளில் ஈடுபட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் வழிபாடுகளில் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் கூடுவதாக எமக்கு முறைப்பாடு கிடைத்தது. அதனடிப்படையில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்ட 50 அடியவர்கள் என்ற அனுமதியை மீறி பல நூற்றுக் கணக்கானோர் ஆலயத்தில் கூடியிருந்தனர்.


அத்தோடு ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர் ஒருவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு பலர் அறிவுறுத்தல் வழங்கியும் சுவாமியை சுமந்துள்ளார்.

எனவே அவ்வாறு அவருடன் இணைந்து சுவாமியை சுமந்து சென்ற 14 பேரை 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்தார்.



இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, தமது இதுபற்றிய தகவல் அறிவிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்.

இதேவேளை சுகாதாரத் துறையின் உயர்மட்டங்களுக்கு அறிவிக்கப்படாது பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் சில ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட தகவல் மத ரீதியான நடவடிக்கையாக கருதப்பட்டு சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.


Previous Post Next Post