யாழ்.ஆயரின் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துச் செய்தி!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வீடுகளில் அமைக்கும் கிறிஸ்மஸ் மரங்களும் குடிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும் என்று யாழ்.ஆயர் கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் அனுப்பி வைத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2020ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை இன, மத, நிற, மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் வேளை உலக மக்கள் அனைவரும் கெரோனாத் தொற்று நோய் பற்றிய பயத்திலும் பதட்டத்திலும் நோய் காரணமாக ஏற்படும் தாக்கங்களுக்கும் உள்ளாகி உள்ளனர். முதலில் பாலக இயேசுவின் அன்பும் அருளும் ஆசீரும் இவ்விழாவை கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

எந்தக் கொள்ளை நோயாலும் கிறிஸ்து பிறப்பின் ஒளியையும் மகிழ்வையும் நம்பிக்கையையும் குறைத்துவிட முடியாது. இந்த கொள்ளை நோய் காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் வேளையிலும்; வீடுகளில் அமைக்கும் கிறிஸ்மஸ் மரங்களும் குடிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும். இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தையும் தாண்டிச் சென்று அவற்றின்; வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இறை அன்பையும் மகிழ்வையும் முழுவதுமாக புரிந்து கொண்டு இயன்றவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்து பிறப்பின் விழா என்பது எந்த நிலையிலும் அது ஒரு மகிழ்வின் விழா. நம்பிக்கையின் விழா. இந்த விழாவை இவ்வாண்டு கொரோனா சுகாதார விதிமுறைகளையும் சமூக இடைவெளியையும் பேணி குடும்ப வட்டத்தில் அமைதியாகக் கொண்டாடுங்கள்.

பாலக இயேசுவின் பிறப்பு உலக மக்கள் அனைவரையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிரார்த்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்று நோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறை வேண்டுதல் செய்யுங்கள்.

உலகம் முழுவதிலும் நோயால் பாதிக்கப்பட்டோர் மன அமைதி பெறுவார்களாக. இறந்தவர்கள் நித்திய அமைதியைப் பெறுவார்களாக.

கொரோனா தொற்று முடிந்துவிடவில்லை. எமது பகுதிகளில் இப்போதுதான் அதிகரிக்கிறது. எனவே மிகுந்த கவனத்துடன் செயற்படுங்;கள்.

தொற்றுநோய், மழைவெள்ளம் போன்ற இக்கட்டான வேளையில் உங்களால் இயன்ற வரை இயலாமையிலும் தேவையிலும் இருப்போருக்கு அன்புக்கரம் நீட்டுங்கள்.

இந்த பெருவிழாவின் போது உலகம் முழுவதிலும் பல்வேறு மொழிகளிலும் பாடப்படும் ஒரே இறைவார்த்தை உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக. உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்பதாகும.; (லூக்காஸ் 2:13-14)

இந்த பெருவிழாக் காலத்தில் அவருக்கு உகந்தவர்களாகி எல்லோரிற்கும் அமைதியையும் அன்பையும் உண்டாக்கும் கருவிகளாகவே நாம் அழைக்கப்படுகிறோம்.

உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக என்ற வார்த்தைகளை எமதாக்கி வாழ அழைப்பு விடுத்து இறையாசீருடன் கிறிஸ்மஸ் புது வருட வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாண்டு ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆண்டு இறை அன்பும் அருளும் ஆசீரும் நிறைந்த ஆண்டாக இறையாசீர் வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post