காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள்! பெங்கல் வாழ்த்துச் செய்தியில் யாழ்.ஆயர்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அரசியல்  கைதிகளையும்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களையும் உடன் விடுதலை செய்யுங்கள் என யாழ்.ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஆயர் அனுப்பி வைத்துள்ள பெங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையிலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் நன்றிப் பெருவிழாவான பொங்கல் விழாவைக் கொண்டாடும் வேளை 2021 ஆம் ஆண்டிற்குரிய பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

பொங்கல் விழா தமிழ் மக்களின் நன்றியின் பெருவிழா. நம்மைத் தாங்கும் நிலம் நமக்குத் தருகின்ற அனைத்துப் பயன்களுக்கும் நன்றி சொல்லும் விழா. முதல் விளைச்சலை இறைவனுக்கும் இயற்கைக்கும் காணிக்கையாக்கும் விழா.

நன்றி கூறும் பண்பு அனைத்து மனிதருக்கும் மிகவும் தேவையான ஒன்று. நம்மை படைத்த இறைவன், நம்மோடு வாழும் அயலவர், நம்மைக் காக்கும் இயற்கை ஆகிய மூவர்க்கும் நாம் என்றுமே நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அனேகமான வேளைகளில் நாம் நன்றி கூறவும், நன்றியாக இருக்கவும் மறந்து விடுகின்றோம். இது அவர்கள் பணி, இது அவர்கள் கடமை என்கின்ற மனப்பாங்கே நம்மில் மேலோங்கி இருக்கின்றது. நன்றி என்ற வார்த்தையை இனிவருங்காலத்தில் அதிகம் பாவிக்கத் தொடங்குவோம்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், தயவு செய்து, நன்றி, மனம் வருந்துகிறேன் என்ற வார்த்தைகள் ஒரு குடும்;பத்தில் இருந்தால் அந்த குடும்பம் மகிழ்வு நிறைந்ததாக இருக்கும் என நன்றி கூறுவதன் முக்கியத்துவத்தை அண்மையில் திருக்குடும்ப திருவிழாவின் போது வலியுறுத்தியுள்ளார்.

கொறோனா தொற்று நோயின் மத்தியிலும் இந்த தமிழ் மக்களின் நன்றியின் விழாவை மகிழ்வோடு கொண்டாடுங்கள். இந்த பொங்கல் விழா எல்லார் மனதுகளுக்கும் அமைதியையும் மகிழ்வையும் தரட்டும்.

போர் முடிந்ததன் பயனையும் மகிழ்வையும், அரசியல் கைதிகள் இன்னும் அனுபவிக்க முடியாமல் உள்ளமை கொடூரமானது. அவர்களை இன்னும் சிறையில்; வைத்திருப்பதால் இனி எதையும் சாதிக்க முடியாது. உடன்விடுதலை செய்யுங்கள். இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது, காணாமல் ஆக்கப்பட்டோர் உயிருடன் இருப்பின் அவர்களை உடன் விடுதலை செய்யுங்கள். அவர்கள் இல்லாதிருப்பின் மரண சான்றிதழ் மற்றும் நஸ்ட ஈடு என்பவற்றை கொடுத்து உறவினர்கள் அவர்களின் இறுதி மரணச் சடங்குகளை நிறைவேற்றி மனம் ஆறுதல் அடைய உதவுங்கள்.

இந்த இரண்டு விடயத்திற்கும் இனியும் காலம் கடத்தாது உடன் முடிவு காணுங்கள் என அரசிற்கு தமிழ் மக்கள் பெயரால் அவசரமான அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாண்டில் நடக்கப் போகும் அனைத்து விடயங்களும் நல்லவையாகவும், நன்மை தருபவையாகவும் இருக்க இறையாசீர்மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம், வாழ்த்துகிறோம்.
Previous Post Next Post