பிரான்ஸின் கலே கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 27 அகதிகள் பலி!

  • குமாரதாஸன், பாரிஸ்.
பிரான்ஸின் வடக்கே-ஆங்கிலக் கால்வாயில்-கலே நீரிணைப் பகுதியில்(Pas de Calais) நேற்று மாலை குடியேறிகளது படகு ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

மீனவர்கள் கொடுத்த அவசர தகவலை அடுத்து பிரான்ஸின் கடற்படையினரும் அவசர மீட்புக் குழுவினரும் கடலில் தத்தளித்த பலரைக்காப்பாற்ற முயன்றுள்ளனர்.எனினும் அவர்களில் அநேகர் சடலங்களாவே மீட்கப்பட்டிருக்கின்றனர். எவராவது உயிர் தப்பியவர்களைத் தேடும் பணிகள் ஹெலிக்கொப்ரர்களது உதவியுடன் இன்று அதிகாலைவரை நீடித்தன.
 
குடியேறிகள் சுமார் 30 பேருடன் இங்கிலாந்து நோக்கிப் பயணித்த காற்று நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் படகே கவிழ்ந்துள்ளது. பலவீனமான அந்தப் படகில் ஆட்களை ஏற்றிக் கடத்திவந்தவர்கள் என நம்பப்படுகின்ற நால்வர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டாமனா (Gérald Darmanin) சம்பவம் நடந்த கடற்க் கரைப்பகுதிக்கு உடனடியாக விஜயம் செய்தார். அமைச்சு வெளியிட்ட தகவல்களின் படி உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்களும் ஒரு குழந்தையும் அடங்குவர். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரவில்லை.
 
சம்பவம் குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கும் அதிபர் மக்ரோன், "ஆங்கிலக் கால்வாய் ஒர் இடுகாடாக மாறுவதை பிரான்ஸ் அனுமதிக்காது" (France will not let the Channel become a cemetery") என்று தெரிவித்திருக்கிறார். 

பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் உயிரிழப்புகள் குறித்துத் தனது அதிர்ச்சியை வெளியிட்டிருக்கிறார்.

பிரான்ஸ்-இங்கிலாந்து இடையே ஆங்கிலக் கால்வாயில் நீடித்து வருகின்ற அகதிகளது அவலங்களில் நேர்ந்த மிக அதிகமான உயிரிழப்புகள் இதுவே ஆகும். 

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்து இங்கிலாந்தில் புகலிடம் கோர வருபவர்கள் மிக நீண்ட காலமாக ஆங்கிலக் கால்வாய் ஊடாக ஆபத்தான படகுப் பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

அலை மற்றும் கொந்தளிப்பு நிறைந்த ஆபத்தான கால்வாயில் அடிக்கடி நடக்கின்ற இதுபோன்ற அகதிகள் அவலங்களுக்கு இரு நாடுகளும் ஒருவர் மீது
ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றன.
Previous Post Next Post