பிரான்ஸில் கொரோனாவின் ஐந்தாவது அலை! கட்டுப்பாடுகளை அறிவித்தார் சுகாதார அமைச்சர்!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
வைரஸின் ஐந்தாவது தொற்றலையை எதிர்கொள்வதற்கான கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று வெளியிட்டிருக்கிறார். 

அதன்படி நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது ஊக்கித் தடுப்பூசி (vaccine booster) ஏற்றும் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்படுகிறது.

பொது இடங்களில் குறிப்பாக நத்தார் சந்தைகளில் மாஸ்க் அணிவது அவசியம் என்றும், சுகாதாரப் பாஸ் பயன்படுத்தும் இடங்களிலும் இனிமேல் மாஸ்க் அணிந்திருப்பது கட்டாயம் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பிசிஆர் வைரஸ் சோதனைச் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலம் இனிமேல் 24 மணித்தியாலங்கள் ஆகும்.

தடுப்பூசி ஏற்றி சுகாதாரப் பாஸ் பெற்றுக் கொள்ளாதவர்கள் இனித் தங்கள் தேவைகளுக்குத் தினமும் பிசிஆர் சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கும்.

தற்சமயம் பிசிஆர் சான்றிதழ்களின் பயன்பாட்டுக் காலம் 72 மணித்தியாலங்கள் ஆகும்.

இரண்டாவது தடுப்பூசி ஏற்றி ஐந்து மாதங்கள் நிறைவடைந்தவர்கள் உடனடியாகவே மூன்றாவது டோஸ் ஏற்ற முடியும். அதற்காக இணையத்தளங்களில் இப்போதே முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதுவரை 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரமே மூன்றாவது ஊசி ஏற்றப்பட்டு வந்தது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு டிசெம்பர் 15 ஆம் திகதி முதலும், ஏனையோருக்கு ஜனவரி 15 ஆம் திகதி தொடக்கமும் மூன்றாவது ஊசி சுகாதாரப் பாஸில் இணைத்துக் கொள்ளப்படும். 

இரண்டாவது ஊசி ஏற்றி ஏழு மாதங்களுக்குள் மூன்றாவது டோஸ் பெற்றுக்கொள்ளாவிட்டால் அத்தகையோரது சுகாதாரப் பாஸ் செயலிழக்கும்.

இதேவேளை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்-முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஐந்த மாதங்களின் பின்னர்-மூன்றாவது டோஸ் செலுத்துவதற்கு நாட்டின் பொதுச் சுகாதார அதிகாரசபையும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த வாரம் அது வெளியிட்ட ஆலோசனையில் 40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு மட்டுமே மூன்றாவது ஊசியைப் பரிந்துரைத்திருந்தது.

நேற்று அதிபர் மக்ரோன் தலைமையில் நடைபெற்ற சுகாதாரப் பாதுகாப்புச் சபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையே அமைச்சர் இன்றைய தினம் செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டார்.

"பொது முடக்கம், ஊரடங்கு, போக்குவரத்துக் கட்டுப்பாடு, கடைகளை மூடுதல் போன்ற அறிவிப்புகள் எதனையும் நான் இன்று விடுக்கப்போவதில்லை" - என்று அவர் கூட்டத்தின் தொடக்கத்தில் கூறினார்.

ஐந்தாவது அலை முந்தியவற்றை விட மிக வீரியமாக உள்ளது என்பதை ஒப்புக் கொண்ட அமைச்சர், தற்போதைய குளிர் காலம் வைரஸ் திரிபுகளின் வேகமான பரவலுக்கு வாய்ப்பாகவுள்ளது என்பதை குறிப்பிட்டார்.

முந்திய தொற்றலைகளை கையாண்ட அனுபவங்களையும் தடுப்பூசி ஆயுதத்தையும் பயன்படுத்தி இந்தப் புதிய அலையையும் வெல்வோம் என்றார் அவர்.
 
அனைவருக்கும் மூன்றாவது டோஸ் வழங்கத் தேவையான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post