பிரான்ஸில் நொந்து நலிந்த உணவகங்களுக்கு "ஒமெக்ரோன்" திரிபு மற்றோர் அடி! வருட இறுதி விருந்துகள் பல ரத்து!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் ஒமெக்ரோன் திரிபு வைரஸின் எதிர்பாராத வருகை உணவகம் மற்றும் உணவு வழங்கும் சேவைகளுக்கு மீண்டும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

நத்தார் மற்றும் வருட இறுதி விருந்துபசாரங்களுக்காகச் செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டு வருவதால் உணவகத் துறை மீண்டும் குழப்பத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேகமாகத் தொற்றக்கூடிய ஒமெக்ரோன் திரிபு மற்றொரு பெரும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நெருக்கடிக்குள் நத்தார், வருட இறுதிக் கொண்டாட்டங்களை எவ்வாறு பாதுகாப்பது என்று அரசுகள் ஆலோசித்து வருகின்றன.
 
நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு முன்பதிவு செய்யப்பட்ட விருந்துபசாரக் கொண்டாட்டங்களில் சுமார் 65 வீதமான பதிவுகள் கடந்த சில நாட்களில் வாடிக்கையாளர்களால் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை உணவகங்கள் மற்றும் உணவு வழங்கல் நிறுவனங்களைப்(restaurateurs and caterers) பிரதிநித்துவம் செய்கின்ற அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களது நத்தார் விருந்துபசார நிகழ்வுகளை நடத்துவதைக் கைவிட்டுள்ளன.சாதாரணமாக உணவகங்களில் சாப்பிடுவோரது எண்ணிக்கையும் சமீப நாட்களில் குறைவடைந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பெருந் தொற்று நோயினால் உலகெங்கும் பெரும் முடக்கத்தைச் சந்தித்த தொழில் துறைகளில் உணவகம் மற்றும் உணவு விநியோகத் தொழில்கள் முதலிடத்தில் உள்ளன. 

சமீப காலங்களில் சிறிது சிறிதாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருந்த உணவகங்களது செயற்பாட்டுக்கு ஒமெக்ரோன் திரிபு மீண்டும் அச்சுறுத்தலாக வந்துள்ளது.
Previous Post Next Post