51 வயது காதலனிடம் 85லட்சம் ஏமாற்றிய 25 வயது கிளிநொச்சி யுவதி கைது!

கப்பலில் பணிபுரியும் 51 வயதுடைய திருமணமாகாத நபரிடம் இருந்து 85 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதுடைய அழகிய அழகுக்கலைஞரான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் தெரிவித்துள்ளது.

யுவதிக்கு எதிரான 51 வயதுடைய கப்பல் பணியாளரின் முறைப்பாட்டில், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் தற்செயலாக கண்ணில் பட்டதையடுத்து அந்த யுவதி அறிமுகமானதாகவும், அன்று முதல் இருவரும் நண்பர்களாகி மிகவும் நெருக்கமானதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கொரிய கப்பலில் பணிக்கு சென்றிருந்த போதிலும் அன்று முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரையான 6 மாதங்களில் சுமார் 85 இலட்சம் ரூபா யுவதியின் தேவைக்காக அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதியை சந்திப்பதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி இலங்கை வந்ததாகவும், காதலியை சந்திப்பதற்காக பம்பலப்பிட்டியில் அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றதாகவும், அங்கு அவர் இல்லை எனவும், ஒரு மாதத்திற்கு முன்னர் கிளிநொச்சியிலுள்ள கிராமப் பகுதிக்கு சென்றது தெரியவந்துள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள காதலியின் வசிப்பிடத்தைத் தேடிச் சென்றதாகவும், அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்த போதிலும் அதுவும் சுவிட்ச் ஓப் செய்யப்பட்டுள்ளதால் தனது வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சி காதலியை திருமணம் செய்துகொள்ளும் நோக்கத்துடன், ஆயிரம் நம்பிக்கைகளுடன் பணம் கொடுத்துள்ளதாகவும், அவர் தற்போது தன்னை ஏமாற்றுவதாக கப்பல் பணியாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, சந்தேகநபரான கிளிநொச்சி காதலியின் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் கணக்குப் பதிவுகளை ஆராய்ந்த பின்னர், அவர் வசிக்கும் முகவரி அடையாளம் காணப்பட்டது.

அதையடுத்து, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு தகவல் அனுப்பப்பட்டது.

யுவதி விசாரணைக்கு சமூகமளித்திருந்தார். இதன்போது, கப்பல் பணியாளரிடமிருந்து பணத்தை பெற்றதை ஏற்றுக்கொண்டார்.

திருமணம் செய்யும் நம்பிக்கையில் இருந்ததாகவும், ஆனால் பழகிப் பார்த்த போது இருவருக்குமிடையில் பொருத்தம் ஏற்படாததால் கப்பல் பணியாளரை திருமணம் செய்யும் யோசனையை கைவிட்டதாக கிளிநொச்சி யுவதி தெரிவித்துள்ளார்.

அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. திரு.விக்கிரமசேகரவின் பணிப்புரையின் பேரில், நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துமிந்த பாலசூரிய தலைமையிலான பிரதான பொலிஸ் பரிசோதகர் பிலப்பிட்டிய உள்ளிட்ட பொலிஸ் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
Previous Post Next Post