யாழில் 10 பேருக்கு எவ்வாறு கொரோனா தொற்றியது? அதிர்ச்சி அறிக்கை வெளியிட்ட மருத்துவர்!!

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவரிலிருந்து அங்கிருந்த மற்றவர்களுக்கும் தொற்றுப் பரவியுள்ளது என்று சமுதாய மருத்துவ நிபுணரும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக வடக்கு மாகாணத்தில் விசேடமாக நியமிக்கப்பட்டவருமான மருத்துவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்த பத்துப் பேருக்குக் கடந்த 14 ஆம், 15 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கொரோனாத் தொற்று உறுதியானது. பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கக் கூடியவாறான ஒழுங்குகள் இல்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தவர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்படக் காரணம் சுவிஸ் மத போதகர் என்றும் அங்கிருந்தவர்களிடமிருந்து மற்றையவர்களுக்குப் பரவவில்லை என்றுதம் கூறியிருந்தார்.

இந் நிலையில் முரளி வல்லிபுரநாதன் கடந்த 6 ஆம் திகதியும் 15 ஆம் திகதியும் வெளியிட்ட அறிக்கையில், தனிமைப்படுத்தல் நிலையங்களின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென்னிலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறிய ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் தொற்று ஏற்பட்டிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து தனிமைப்படுத்தல் நிலையங்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பலாலியில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடந்த 14 ஆம் திகதி தொற்றுக்குள்ளானவர்கள் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

சுவிஸ் மத போதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்து மார்ச் மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார். 30 நாட்களின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 8 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. அங்கு முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களிடமிருந்தே இவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருக்கின்றது என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.

தனிமைப்படுத்தல் மையங்கள் கொரோனா தொற்றாதவாறான பாதுகாப்பு நிலையங்களாக இல்லை என்ற அவரது அறிக்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post