பரிந்துரைகளை மீறியே யாழில் ஊரடங்கு தளர்வு! மக்களே அவதானம்!!

யாழ்ப்பாண மாவட்ட சுகாதாரரத் துறையின் பரிந்துரையை மீறியே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பிரதேச செயலர் பிரிவுகளில் மாத்திரம் அடுத்த வாரமும் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் மே 5 ஆம் திகதியின் பின்னருமே ஊரடங்கு தளர்த்த முடியும் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தபோதும் அதனைப் புறக்கணித்து நாளை முதல் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கும், நாட்டின் 9 மாகாணங்களினதும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் இடையில் கடந்த புதன்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் தற்போதுள்ள நிலைமை ஆராயப்பட்டது. ஊரடங்கு நீக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அதன் பின்னர் ஒவ்வொரு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களாலும் தமது மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஊரடங்கை எப்படித் தளர்த்துவது என்பது தொடர்பான பரிந்துரை, மாகாண ஆளுநர்களுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அடுத்த வாரம் ஊரடங்கைத் தளர்த்த முடியும் என்று குறிப்பிட்டிருந்தது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, காரைநகர், சாவகச்சேரி, மருதங்கேணி ஆகிய 6 பிரதேச செயலர் பிரிவுகளும் ஆபத்துக் குறைந்த பிரதேசங்கள் என்பதால் அடுத்த வாரம் ஊரடங்கை நீக்க முடியும் எனவும் ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளில் கொரோனா சோதனை நடத்தப்பட்டு அதன் முடிவுகளைப் பொறுத்து மே மாதம் 5 ஆம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கை நீக்கலாம் என்றும் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண மாவட்டத்துக்க நேற்று முன்தினம் வருகை தந்த பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரத்தனவும், யாழ்ப்பாணத்தில் தற்போதைக்கு ஊரடங்கைத் தளர்த்த வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அரசு யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தை அதிஇடர் அபாய வலயப் பிரதேசத்திலிருந்து விடுவித்தமைக்கான காரணத்தையும் அரசு தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மக்கள் அனைவரும் எமது சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து, உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் அத்தியாவசய தேவைகள் தவிர, தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை முடிந்தவரை குறைத்து உங்களையும் யாழ்.மாவட்டத்தையும் கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Previous Post Next Post