யாழில் ஊரடங்கு தளர்த்தப்படப் போகும் இடங்கள்! மருத்துவர் கேதீஸ்வரன் தகவல்!!

யாழ்.குடாநாட்டிற்கான ஊரடங்குச் சட்டம் இன்னமும் நீடிக்கப்படக் கூடிய நிலை காணப்படலாம் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவது தொடர்பில் நேற்று ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது விரிவாக ஆராயப்பட்டது.

விரைவில் நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கான ஆலோசனையை வழங்கவுள்ளோம். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் சுவிஸ் போதகரின் வழிபாட்டில் பங்கெடுத்தர்களில் 320 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 140 பேரிடம் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களிடமும் தொடர்ந்தும் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவ்வாறானவர்கள் நல்லூர், யாழ்ப்பாணம், உடுவில், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வசித்துவருகிறார்கள். அவர்கள் அனைவரிடமும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் யாழ்ப்பாணத்திற்கான ஊரடங்குச் சட்டத்தளர்வு நீடிப்புக் காலம் விரைவில் மட்டுப்படுத்தப்படும்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆயிரத்து 200 பேர் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற போதிலும் அவர்கள் தொடர்பில் அச்சமடைய வேண்டிய சூழல் காணப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் விரைவில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக தீவகம், தென்மராட்சி மற்றும் வடமராட்சியின் மருதங்கேணி பிரதேசம் என்பன காணப்படுகின்றன.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது குறித்த பகுதிகளே தளர்த்தப்படும். அதன் பின்னர், சுவிஸ் போதகரின் வழிபாட்டில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நல்லூர், யாழ்ப்பாணம், உடுவில், சண்டிலிப்பாய் சுகாதார சேவைகள் பிரிவுகள் தவிர்ந்த யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளில் தளர்த்தப்படும்.

நான்கு பிரிவுகளிலும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் பின்னர் அந்தப் பகுதிகளுக்கும் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post