போதை மாத்திரைகள் விற்பனை செய்த சிறுவன்! கைது செய்ய முற்பட கடலில் குதித்தததால் பரபரப்பு!! (படங்கள்)

தீவகம் – வேலணையில் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்ய முற்பட்ட வேளை பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து தப்பிக்க முயற்சித்துள்ளான்.

எனினும் கடற்படையினர் விரைந்து செயற்பட்டதால் அந்தச் சிறுவனை நீண்ட தூரம் நீந்திச் சென்று பிடித்து வந்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்டைதீவுச் சந்திக்கு அண்மையில் இன்று மாலை இடம்பெற்றது.

வேலணை – வெள்ளைக்கடற்கரை (சாட்டி) பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் 18 வயதுச் சிறுவனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். இந்தச் சிறுவன், வேலணைப் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை வழங்குவதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரிசோதகர் விவேகானந்தனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவனைக் கைது செய்ய முயற்சித்துள்ளார்.

இதன்போது பொலிஸ் அலுவலகரிடமிருந்து தப்பித்த சிறுவன், பண்ணைக் கடலுக்குள் பாய்ந்து நீந்திச் சென்று தப்பிக்க முயற்சித்துள்ளார். அதனையடுத்து மண்டைதீவு கடற்படை காவலரணைச் சேர்ந்த கடற்படையினர் நீந்திச் சென்று சிறுவனை கரைக்குக் கொண்டு வந்தனர்.

சிறுவனை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்தனர். தனக்கு போதை மாத்திரைகளை வழங்குபவரை அடையாளம் காட்டுவதாக சிறுவன் தெரிவித்ததை அடுத்து சாட்டி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.


Previous Post Next Post