இந்திய வர்த்தகருக்குக் கொரோனா? யாழில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் இணுவிலில் தங்கியிருந்து இந்தியா சென்றவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சொல்லப்பட்டபோதிலும் குறித்த சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்திருக்கின்றது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவர் அண்மையில் இந்தியாவிற்கு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

அங்கிருக்கின்ற வியாபாரி ஒருவர் ஊடாக யாழ்ப்பாணத்தில் உள்ள இன்னொரு புடைவை வியாபாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலே ஊடகங்களில் வெளியாகியிருப்பதாக நம்பகரமாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தை அடுத்து ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்தூதரக அதிகாரி பாலச்சந்திரனைத் தொடர்புகொண்டு கேட்டுள்ளனர். அவர் பதிலளிக்கும்போது,

குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன்,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படும் நபர் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியா சென்ற போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத நிலையிலேயே சென்றிருந்தார்.

குறிப்பாக அந்த நபரை யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் ஏற்றிய போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதே போன்று கொழும்பு துறைமுகத்திற்குள் அவர் பிரவேசித்த போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் கப்பலில் இருந்த மருத்துவரினாலும் அவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

மேற்படி 3 பரிசோதனைகளிலும் அவருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இல்லை என்பதை உறுதி செய்த பின்பே பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டது.

உடல் வெப்ப பரிசோதனை செய்த போது தொற்றுக்கான அறிகுறி இருந்த வேறு சிலர் பயணத்தை தொடர இடை நிறுத்தப்பட்டார்கள் என்றும் பாலச்சத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த தகவல் வெளியாகியதும் துரிதமாக செயற்பட்ட சுகாதாரத் திணைக்களத்தினர், குறித்த இந்தியர் தங்கியிருந்த வீட்டில் தற்போதும் குடியிருக்கும் குடும்பத்தாரையும், அவர்களுக்கு வீடு வாடகைக்கு வழங்கிய வீட்டு உரிமையாளரையும், குறித்த நபர் சென்று வந்த ஏழாலையில் உள்ள வீடு ஒன்றின் வீட்டாரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

தொற்றுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்ற நபருடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையில் இணுவிலின் அங்கலப்பாய், வேம்போலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள், ஏழாலையைச் சேர்ந்த ஒரு குடும்பம் என மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொடர்புபட்ட செய்தி:- யாழில் மீண்டும் கொரோனாத் தொற்று! முடக்கப்படுகிறது இணுவில் கிராமம்?
Previous Post Next Post