பாரிஸ் உட்பட நகரங்களில் ஊரடங்கு! இரவு 9 மணி முதல் காலை 6மணி வரை! ஜனாதிபதி அறிவிப்பு!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் பிராந்தியம் உட்பட தீவிர தொற்று வலயங்களாக உள்ள பெரு நகரங்களில் வரும் நான்கு வாரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்செய்யப்படும்.

எதிர்வரும் சனிக்கிழமை (ஒக். 17) தொடக்கம் இரவு 9மணி முதல் காலை 6 மணிவரை இந்த இரவு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.இச்சமயத்தில் மக்களது நடமாட்டங்கள் பொலீஸாரால் கண்காணிக்கப்படும். 

டிசெம்பர் முதலாம் திகதி வரை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இரவு ஊரடங்கை மீறுவோரிடம் குறைந்தது 135 ஈரோக்கள் அபராதம் அறவிடப்படும். 

அதிபர் இமானுவேல் மக்ரோன் இன்றைய தொலைக்காட்சி நேர்காணலில் இத் தகவல்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விசேட தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அதிபர் மக்ரோன் இன்றிரவு கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

எதிர்பார்க்கப்பட்டது போன்றே இரவு நேர ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை அவர் அப்போது வெளியிட்டார்.பாரிஸ் உட்பட Grenoble, Lille, Lyon, Aix-en-Provence, Marseille, Montpellier, Rouen, Saint Etienne
Toulouse ஆகிய எட்டு நகரங்களில் இந்த இரவு ஊரடங்கு அமுலுக்கு வர உள்ளது.

"இந்த ஊரடங்கின் அர்த்தம் மக்களின் நடமாடும் உரிமையைக் கட்டுப்படுத்துவதல்ல" என்பதை சுட்டிக்காட்டி இருக்கும் மக்ரோன், வைரஸ் தொற்றை எதிர்ப்பதற்காக இது போன்ற சில இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பதைக் குறிப்பிட்டார். 

இரவு ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு உணவகங்கள், மற்றும் இரவு நேரத் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. உணவகங்கள் மற்றும் கடைகள் மூடப்படவேண்டிய நேரம், பொதுப்போக்குவரத்துகள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் உடனடியாக வெளியாகவில்லை. 

எனினும் இவை தொடர்பான மேலதிக விளக்கங்களை பொலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பின்னராக வெளியிடுவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவசரகால நிலை பிரகடனம்!

இதேவேளை - கொரோனா வைரஸ் பரம்பலின் தீவிரமான இரண்டாவது அலைக்குள் நாடு பிரவேசிப்பதை அடுத்து சுகாதார அவசரகால நிலைமையை(L'état d'urgence sanitaire) அரசு மீண்டும் பிரகடனம் செய்கிறது.

நாடு முழுவதும் அவசரகால நிலைமையை சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அமுலுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணை இன்று புதன் கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது.

நகரங்களில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவது போன்ற நெருக்கடிகால விதிகளை அமுல் செய்வதற்கு உரிய சட்ட வலுவைப் பெறவேண்டிய காரணத்தாலேயே அவசரகால நிலைமை மீண்டும் பிரகடனம் செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் நெருக்கடியை அடுத்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்திருந்த சுகாதார அவசரகாலச் சட்டம் பின்னர் ஜூலை 9ஆம் திகதி நீக்கப்பட்டிருந்தது.

நன்றி:
குமாரதாஸன்,
பாரிஸ்.


Previous Post Next Post