யாழைச் சேர்ந்த கர்ப்பவதியான அரச உத்தியோகத்தருக்கு அலுவலகத்தில் நடந்த கொடூரம்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச செயலத்தில் பணியாற்றிவருகின்ற இரண்டு பிள்ளைகளின் தயாரான கர்ப்பவதி தாயார் ஒருவர் தொடர்ந்தும் பேருந்தில் பயணித்தமையால் குழந்தை இறந்துள்ளதுடன் அவரும் ஆபத்தான நிலையினை எதிர்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

நாளாந்த போக்குவரத்துச் சிரமம் தொடர்பில் சுட்டிக்காட்டி இடமாற்ற அனுமதி கோரியபோதிலும் பிரதேச செயலர் உடன்பட மறுத்தமையாலேயே அவருக்கும் குழந்தைக்கும் இவ்வாறான அவல நிலை ஏற்பட்டதாக சக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாவட்டச் செயலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகம், கரைதுறைபற்று,

மாவட்டச் செயலாளர், மாவட்ட செயலகம், முல்லைத்தீவு

நிறைமாத கர்ப்பிணிக்கு ஏற்பட்ட மனிதாபிமானமற்ற நடவடிக்கையினை வெளிக்கொண்டரலும் நிர்வாக நடவடிக்கைகான கோரிக்கையும்

மேற்படி விடயம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் கீழ்வரும் விடயத்தை அவசரமும் அவசியமானதாகவும் கருதி தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

கரைதுறைபற்று பிரதேச செயலக திட்டமிடல் கிளையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிவந்த (...........) என்பவருக்கு இடம்பெற்ற துன்பியல் சம்பவம் தொடர்பில் உடனடியாக தங்களின் கவனத்தினை ஈர்க்க விரும்புகின்றோம்.

யாழ்ப்பாணத்தினை நிரந்தர வதிவிடமாக கொண்ட (...........) அவர்கள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே அவருக்கு 02 குழந்தைகள் இருப்பதன் காரணமாக தினமும் யாழ்ப்பாணத்திலிருந்து கடமைக்கு கரைதுறைபற்று பிரதேச செயலகத்துக்கு வந்து சென்றார். தன்னுடைய உடல்நிலையினை கருத்தில்கொண்டு தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவதற்காக அனுமதிகோரி பிரதேச செயலாளரிடம் 02 தடவைகள் விண்ணப்பிருந்தார். இருந்தபோதும் பிரதேச செயலாளர் அவரது கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும் 05 11 2020 இல் குழந்தை கிடைக்கும் நிலையில் நிறைமாத கர்பிணியாக இம் மாதம் 02 10 2020 வரை அலுவலகத்திற்கு சமூகமளித்திருந்தார். தற்போது கடந்த 09 10 2020 அன்று உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர் போக்குவரத்தினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக வயிற்றில் குழந்தை இறந்துள்ளதாக வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் குழந்தையினை வெளியேற்றுவதற்காக தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையின் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சம்பவத்தினால் சக ஊழியர்களாகிய நாம் அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையினையும் அடைந்துள்ளதோடு மன அழுத்தத்துக்கும் ஆளாகியுள்ளோம். எனவே பிரதேச செயலாளரின் மனிதாபிமானமற்ற செயற்பாடு காரணமாக ஒரு குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டுள்ளதுடன் தாயும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையினையும் தோற்றுவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் பிறிதொரு உத்தியோகத்தருக்கு இத்தகைய நிலை ஏற்படாத வகையில் நிர்வாக ரீதியான பொருத்தமான நடவடிக்கையினை எடுக்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை, பிரதேச செயலகம், கரைதுறைப்பற்று

என்று குறிப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தின் பிரதி வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post