நீதிமன்றில் தண்டம் செலுத்திய முதியவரை மீளவும் கைது செய்தனர் அச்சுவேலிப் பொலிஸார்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் , நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை பொலிஸார் மீள கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் தடுத்து வைத்து நீதிமன்றில் மீள முற்படுத்தியுள்ளனர்.

அதன் போது முதியவரின் குடும்பத்தினரால், அவர் ஏற்கனவே நீதிமன்றில் குறித்த குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தியமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்த போது , பொலிஸார் தாம் தவறுதலாக கைது செய்து விட்டோம் என மன்றுரைத்தனர்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் வசிக்கும் முதியவர் ஒருவர் கடந்த ஆறு மாத காலப்பகுதிக்கு முன்னர் வீதி போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு சுமத்தி , மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத்தாக்கல் செய்தனர்.

அதனையடுத்து மன்றில் முன்னிலையான முதியவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டு , மன்றினால் விதிக்கப்பட்ட தண்டபணத்தை செலுத்தி இருந்தார்.

இந்நிலையில், அச்சுவேலி பொலிஸார், நேற்று முதியவரின் வீட்டிற்கு சென்று , போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது மன்றில் முன்னிலையாகாத குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறி கைது செய்துள்ளனர்.

குறித்த முதியவர் மன்றில் தண்டப்பணம் செலுத்திய ஆவணங்களை பொலிஸாரிடம் குடும்பத்தினர் காண்பித்துள்ளனர். அத்துடன் , முதியவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். நீதிமன்றில் தாம் முன்னிலையாவதாகவும் , அல்லது காலையில் பொலிஸ் நிலையம் வருவதாகவும் கூறியுள்ளனர்.

குடும்பத்தினர் கூறிய எவற்றையும் செவிமடுக்காத பொலிஸார், எதுவாகினும் நீதிமன்றில் பாருங்கள் எனக் கூறி முதியவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் ஒருநாள் முழுவதும் தடுத்து வைத்திருந்த முதியவரை இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதன் போது முதியவர் சார்பில் , அவர் ஏற்கனவே குறித்த குற்றத்திற்காக தண்டம் செலுத்திய ஆவணங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதால் முதியவரை மன்று விடுவித்தது.

குற்றத்திற்கு தண்டம் செலுத்திய முதியவரை தற்போதைய கொரோனோ வைரஸ் தொற்று சூழலிலை கூட கவனத்தில் எடுக்காது , இருதய நோயாளியான அவரை பொலிஸார் ஒருநாள் முழுவதும் தடுப்பு காவலில் வைத்திருந்த நடவடிக்கை தொடர்பில் முதியவரின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அசண்டையீனத்தாலையே மன்றினால் தண்டிக்கப்பட்ட ஒருவர் மீளவும் அதே குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என பொலிஸ் தகவல் மூலம் அறிய முடிகிறது.
Previous Post Next Post