முல்லைத்தீவு குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
குமுலமுனை மூன்றாம் கண்டம் பகுதியில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குமுழமுனை பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை மயூரன் (வயது-33) , சுஜிபன் மற்றும் கணுக்கேணி மேற்கைச் சேர்ந்த ஜெகநாதன் யுகந்தன் (வயது-32) ஆகிய மூவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இரவாகியும் மூவரும் வீடு திரும்பாத நிலையில் , அவர்களது உறவினர்கள் அவர்களை தேடி சென்ற போது வயலில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உறவினர்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.