கொரோனா தொற்றால் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்!


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் திரையுலக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

74 வயதான தமிழ் திரையுலக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ‘சின்னத் தம்பி’, 'திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பெருமளவு படங்களில் நடித்துள்ளார்.

இடிச்சபுளி செல்வராஜின் சகோதரரான இவர் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை இவா் வெளிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலக பிரபல தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் கொரோனா தொற்றுக்குள்ளாகி கிசிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post