யாழில் வன்முறைச் சம்பவங்கள்! இந்தியாவிலிருந்து மிரட்டியதால் செய்தோம்!! கைதான நால்வர் வாக்குமூலம்!!!


மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி ஆகியோர்  இயக்குவதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்தும் மானிப்பாய் லவ் ஒழுங்கையைச் சேர்ந்த இந்திரன் நிரோஷ்குமார் (வயது-27) என்பவர் மீதே கடந்த முதலாம் திகதி இரவு 7 மணியளவில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நடைமுறையில் இருந்த நிலையில் பொலிஸார், இராணுவத்தினர் முன்னிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கழுத்து, காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று கைது செய்தனர். சுன்னாகம், மல்லாகம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய இடங்களைச் சேர்ந்த 25-28 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்கு வாள்களை செய்து கொடுத்த குற்றச்சாட்டிலும் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களிடமிருந்து 3 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற தேவா மற்றும் ஜெனியும் அச்சுறுத்திக் கூறியதால்தான் இந்த தாக்குதலை தாம் செய்ததாக விசாரணைகளில் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் அண்மையில் கோண்டாவில் காரைக்காலில் வீடொன்றுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
Previous Post Next Post