"அல்லாவைத் தவிர கடவுள் இல்லை" பிரான்ஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.தீவிரவாதி நீதிமன்றில் தெரிவிப்பு!


  • குமாரதாஸன், பாரிஸ். 
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி ஐ.எஸ். ஐ.எஸ். என்ற இஸ்லாமிய இயக்கம் பாரிஸ் நகரில் நடத்திய தொடர் தாக்குதல்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

பாரிஸின் மத்தியில் அமைந்துள்ள நீதிமன்ற இல்லத்தில் பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்றுக் காலை விசாரணைகள் தொடங்கின.

வெளியே ஆயுதம் தரித்த பொலீஸார் மோப்ப நாய்களுடன் தீவிர பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

பிரான்ஸின் நவீன வரலாற்றில் மிக நீண்ட குற்றவியல் வழக்கு என்று கணிக்கப்படுகின்ற இந்த நீதி விசாரணைகளில் பாதிக்கப்பட்டோர் சார்பில் சுமார் 1,700 சிவில் தரப்புகள், 300 சாட்சியங்கள் ஆகியோரும் சுமார் 350 சட்டவாளர்கள், நிபுணர்கள் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். வழக்கு சுமார் 140 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் உத்தரவில் அதன் கொமாண்டோ அணி ஒன்று - நன்கு திட்டமிட்டு - சமகாலத்தில் நான்கு இடங்களில்- நடத்திய தற்கொலைக் குண்டு மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் மொத்தம் 130 பேர் உயிரிழந்தனர். 350 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.நாட்டை உலுக்கிய அந்தச் சம்பவம் பிரான்ஸ் உலகப் போரின் பின்னர் சந்தித்த மிக மோசமான தாக்குதலாக மதிப்பிடப்படுகிறது.

பாரிஸ் நகரின் மையத்தில் ஓர் அருந்தகம், உணவகம் மற்றும் உள்ளரங்க இசைக் கலையகம்(Bataclan) ஆகிய மூன்று இடங்களிலும், புறநகரான சென்துனியில் அமைந்துள்ள தேசிய விளையாட்டு அரங்கிலும் (Stade de France in Saint-Denis) சம காலத்தில் ஆயுதபாணிகள் குண்டுகளை வெடிக்க வைத்துத் தாக்குதல்களை நடத்தினர். விளையாட்டு அரங்கில் உதைபந்தாட்டம் ஒன்றை ரசித் துக்கொண்டிருந்த அப்போதைய அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட், தாக்குதல்நடந்த இடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.

தாக்குதல் நடத்திய அணியில் உயிருடன் தப்பிச் சென்று பின்னர் பிடிபட்ட 31 வயதுடைய சலா அப்தஸ்லாம் (Salah Abdeslam) பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். தனது தற்கொலைக் குண்டு அங்கியைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற அவர் நான்கு மாதங்களின் பின்பு பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் தனது வசிப்பிடத்துக்கு அருகே வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார்.

மொரோக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரான சலா அப்தஸ்லாம், கைதான நாள் முதல் பொலீஸாருக்கு வாக்கு மூலம் அளிக்க மறுத்துத் தொடர்ந்து மௌனம் காத்து வந்தார். சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர் அங்கு கேள்விகளுக்குப் பதிலளித்தார். தான் ஓர் ஐ.எஸ். இயக்க வீரர் என்பதை அச்சமயம் அவர் ஒப்புக்கொண்டார்.

குற்றக் கூண்டு அறையில் நின்றவாறு "கடவுள் எவரும் இல்லை, அல்லாவைத் தவிர" என்று உரத்த குரலில் கூறினார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

"கடந்த ஆறு ஆண்டுகளாக சிறையில் நாய் போன்று நடத்தப்படுகிறேன். அது பற்றி எவரிடமும் முறையிடப் போவதில்லை. அதற்கு ஒரு நாள் நீங்கள் பொறுப்புக் கூறும் நிலை வரும்" - என்று அவர் நீதிபதிகளைப் பார்த்துக் கூறினார்.

சலா அப்தஸ்லாமுடன் சேர்த்து இருபது பேர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களில் ஆறுபேர் மன்றில் சமூகமளிக்காத நிலையில் விசாரணைகளை எதிர்கொள்கின்றனர்.முன்னாள் அதிபர் ஹொலன்ட் அவர்களும் ஒரு சாட்சியாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகவுள்ளார்.
 
நீதிமன்ற விசாரணைகளைப் படமாக்குவதற்கு அனுமதி இல்லை என்ற போதிலும் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி அதனை ஆவணப்படுத்தும் நோக்குடன் விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு தொடங்கியுள்ள வழக்கு விசாரணைகள் தங்களுக்கு நீதியை வழங்கும் என்ற நம்பிக்கையோடு தாக்குதலில் உயிரிழந்தவர்களது பெற்றோர்களும் உறவினர்களும் காத்திருக்கின்றனர்.
Previous Post Next Post