பிரான்சில் பெண் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டுக் கொலை!


  • குமாரதாஸன், பாரிஸ். 
வீட்டில் தனித்திருந்த ஓய்வூதியரான பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் அந்தப் பெண்ணின் வங்கி அட்டையை (bank card) அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி உள்ளார்.

வங்கி அட்டை மூலம் ஆயிரம் ஈரோக்கள் பணம் காசாகப் பெறப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ள பொலீஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
 
பிரான்ஸின் தென் பகுதியில் Agde (Hérault) என்ற நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற ஆசிரியையான 77 வயது விதவைப் பெண் ஒருவரே இவ்வாறு கோரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை இழந்த அப் பெண் தனது இல்லத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

பெண்ணின் மகன் ஒருவர் பாரிஸ் பிராந்தியத்தில் வசித்து வருகிறார். தினமும் வழமையாகத் தாயாரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக் கிடைக்காததை அடுத்துச் சந்தேகமடைந்த அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமெரா (CCTV cameras) காட்சிகளைப் பரிசோதித்துள்ளார்.

அப்போது வீட்டில் சந்தேகத்துக்குரிய உருவம் ஒன்றின் நடமாட்டத்தையும் தாயார் தரையில் கிடப்பதையும் அவதானித்தார் என்றும் அது பற்றி உடனடியாக அவர் பொலீஸாருக்குத் தகவல் கொடுத்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பொலீஸார் உடனடியாக வீட்டுக்குச் சென்ற போது பெண்ணின் தலையற்ற சடலம் தரையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.துண்டிக்கப்பட்ட அவரது தலை அருகே மேசை ஒன்றில் காணப்பட்டுள்ளது. வீட்டுக்கு வெளியே இரத்தக் கறைகளுடன் கையுறைகள் மீட்கப்பட்டுள்ளன கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டிலும் சடலத்திலும் தடயவியல் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணுக்கு அறிமுகமானவர் என்றும், உதவி வேலைகளுக்காக வீட்டிற்கு வந்து செல்பவர் என்றும் சொல்லப்படுகிறது.
 
இந்தப் படுகொலை தொடர்பான தகவல் நேற்று மாலை தெரிய வந்ததும் அப்பிரதேச வாசிகளிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் காணப்பட்டது.
Previous Post Next Post