பிரான்ஸில் தடுப்பூசி ஏற்றியவராயிருப்பினும் "ஒமெக்ரோன்" தொற்றாளர்களை உடனே தனிமைப்படுத்த உத்தரவு!


  • குமாரதாஸன். பாரிஸ்.
உலகை அச்சுறுத்திவரும் 'ஒமெக்ரோன்' என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபின் தொற்றுக்கு ஆளாகுவோரையும், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களையும் - அவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியிருப்பினும் கூட - உடனடியாகத் தனிமைப்படுத்துமாறு பிரான்ஸின் சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருக்கிறது.

சுகாதார அமைச்சின் இந்த உத்தரவு மருத்துவமனைகளுக்கும் ஏனைய சுகாதார நிறுவனங்களுக்கும் கிடைத்திருப்பதாக ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

பூரணமாகத் தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றியவர்கள் தொற்றுக்குள்ளானால் அவர்கள் ஏழு நாட்களுக்குத் தங்களை கட்டாய சுய தனிமைப்படுத்தவேண்டும் என்ற விதிகள் தற்சமயம் பிரான்ஸில் தளர்த்தப்பட்டிருக்கின்றன. 

இந்த சமயத்தில் தடுப்பூசிகளை எதிர்க்கும் வலிமை கொண்டது என நம்பப்படும் "ஒமெக்ரோன்" திரிபின் வருகை மீண்டும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளைப் புதிதாக இறுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆபிரிக்காவின் தெற்கு நாடுகளில் முதலில் தோன்றியதாக நம்பப்படும் ஆபத்தான பிறழ்வுகளை எடுக்கின்ற உருமாறிய வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு'ஒமெக்ரோன்' (Omicron) என்று பெயர் சூட்டியிருப்பது தெரிந்ததே. 

இந்த வீரியமான திரிபு தற்சமயம் இங்கிலாந்து ஜேர்மனி,பெல்ஜியம், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

தென் ஆபிரிக்காவில் இருந்து அண்மையில் திரும்பிய ஒருவருக்குப் புதிய திரிபு தொற்றியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாக ஜேர்மனியின் சுகாதார அமைச்சு முதலில் தெரிவித்திருந்தது.

தற்சமயம் நாட்டின் தெற்கு மாநிலமாகிய பவாறியாவில் மியூனிச்(Munich)நகரில் இருவருக்கு 'ஒமெக்ரோன்' தொற்றுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
  • நெதர்லாந்தில்...
தென் ஆபிரிக்காவில் இருந்து இரண்டு விமானங்களில் நெதர்லாந்தின் அம்ஸ்ரடாம் ஷிபோல்(Schiphol) விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வந்திறங்கிய பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து வைரஸ் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 61 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அது புதிய "ஒமெக்ரோன்" கிரிமித் தொற்றுத்தானா என்பதை உறுதிப்படுத்தும் வரை அவர்கள் அனைவரும் விமான நிலையத்துக்கு அருகே ஒரு ஹொட்டே லில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூலம் அங்கு பெரும் கொத்தணியாக "ஒமெக்ரோன்" திரிபு நுழைந்து விடலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நெதர்லாந்து ஏற்கனவே தீவிரமான தொற்றலையை எதிர்கொண்டுள்ளது.

அங்கு பொது முடக்கக் கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் வர்த்தக நிலையங்கள் போன்றன மாலை ஐந்து மணியுடன் மூடப்படுகின்றன.

தற்போது கிடைக்கக் கூடிய தடுப்பூசிகளை எல்லாம் எதிர்த்துப்பரவும் வலிமை கொண்ட 'ஒமெக்ரோன்' திரிபு, தடுப்பூசியால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொற்று நோயை "மீள் உருவாக்கம்" செய்துவிடலாம் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
Previous Post Next Post