பிரான்ஸில் முதல் “ஒமெக்ரோன்” தொற்றாளர் அடையாளம்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் ஒமெக்ரோன் தொற்று என்ற சந்தேகத்தில் சுமார் ஒரு டசின் தொற்றாளர்களது மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது தொற்றாளர் கடல் கடந்த நிர்வாகப் பிரதேசமாகிய ரியூனியன் (Réunion) தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

55 வயதுடைய பெண்ணாகிய அவர் ஆபிரிக்க நாடாகிய மொசாம்பிக்கில் இருந்து (Mozambique) தென் ஆபிரிக்கா வழியாக ரியூனியன் தீவுக்கு வந்தவர் என்பதை "வெப்பமண்டலத் தீவுகளில் தொற்று செயல்முறை ஆராய்ச்சிக்கான கூட்டுப் பிரிவு" (Joint Unit for Infectious Process Research in Tropical Islands - PIMIT) உறுதிப்படுத்தி உள்ளது.

தசைநார் வலி மற்றும் களைப்பு அறிகுறிகளுடன் உள்ள அந்தப் பெண்ணும் அவரோடு தொடர்புகளை வைத்திருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தீவில் உள்ள தொற்றுநோய் நிபுணர் ஒருவர் பாரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்றாவது தடுப்பூசி ஏற்றுகின்ற திட்டங்களை பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவும் முடுக்கி விட்டுள்ளன. ஒரு வார காலப்பகுதிக்குள் சுமார் முப்பது லட்சம் பேர் தங்களது மூன்றாவது ஊசிக்கான முன்பதிவுகளை செய்துள்ளனர் என்ற தகவலை பிரான்ஸின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதிபர் எமானுவல் மக்ரோன் தனது மூன்றாவது டோஸை கடந்த சனிக்கிழமை பெற்றுக் கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஒமெக்ரோன் வைரஸின் மரபு இயல்புகளைக் கண்டறிந்து அதற்கு எதிரான தடுப்பூசி ஒன்றை ஆயத்தம் செய்கின்ற ஆய்வுகள் துரித கதியில் நடைபெறுவதாக அமெரிக்கா - ஜேர்மனி கூட்டு நிறுவனமாகிய'பைசர்-பயோஎன்ரெக்' அறிவித்திருக்கிறது.

அடுத்த நூறு நாட்களில் புதிய ஊசியைத் தயாரித்து வெளியிடுகின்ற வசதிகள் தங்களிடம் இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

லண்டனில் கூடிய ஜீ7 நாடுகளின் சுகாதார அமைச்சர்களது அவசர மாநாடு, மிக வேகமாகப் பரவக்கூடிய ஒமெக்ரோன் திரிபை எதிர்கொள்ள உலக அளவில் அவசர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது.

வட அமெரிக்காவில் முதலாவது ஒமெக்ரோன் தொற்றாளர் கனடாவில் கண்டறியப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அதிபர் ஜோ பைடன், "தற்போதைய ஆரம்ப நிலையில் ஒமெக்ரோன் திரிபு குறித்துப் பதற்றப்படுவதற்குக் காரணங்கள் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

பூரணமாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் மாஸ்க் அணிந்து கொண்டால் உள்ளிருப்பு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Previous Post Next Post