உலகை மிரட்டும் “ஒமெக்ரோன்”! வயோதிபர்கள், பலவீனமானவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!


  • குமாரதாஸன், பாரிஸ். 
அறுபது வயதுக்கு மேற்பட்டோர்,மற்றும் நோயின் தீவிர நிலையை எட்டக்கூடிய பலவீனமான உடல் வலுக் கொண்டவர்கள் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள  வேண்டும்.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பு ஆலோசனை தெரிவித்துள்ளது.

ஆபத்தானதும் குழப்பமானதுமான ஒமெக்ரோன்(Omicron) கோவிட் திரிபு உலகெங்கும் பரவி வருவதை அடுத்தே இவ்வாறு பயண ஆலோசனை வெளியிடப்பட்டிருக்கிறது.

இருதய நோய்கள், நீரிழிவு, புற்றுநோய் போன்றவற்றால் அவதிப்படுவோரும் மற்றும் பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படுகின்ற வயது வரம்பை எட்டியவர்களுமே வெளிநாடுகளுக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்கப்பட்டிருக்கின்றனர்.

உலக நாடுகள் கோவிட் வைரஸின் நான்காவது, ஐந்தாவது அலைகளை எதிர் கொண்டுள்ளன. இந்த சமயத்தில் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஒமெக்ரோன் என்னும் மிக அதிக பிறழ்வுகளை எடுக்கும் திரிபு பரவத் தொடங்கி உள்ளது.

ஆபத்தான ஒமெக்ரோன் திரிபு பரவுவது பற்றிய முதல் எச்சரிக்கையை தென் ஆபிரிக்கா கடந்த வாரம் வெளியிட்டது. அதனை அடுத்து உலகின் பல நாடுகளும் தென் ஆபிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான போக்குவரத்துகளை அவசரமாகத் துண்டித்தன.

இவ்வாறு நாடுகளுக்கு இடையே எழுந்தமானமாகப் பயணத் தடை விதிப்பது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவிடாது என்றும்-மாறாக நாடுகள் மீதும் அங்கு வாழும் மக்கள் மீதும் அது தேவையற்ற சுமைகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

திரிபு தோன்றியதற்காக ஒரு நாட்டின் மீது தார்மீகப்பொறுப்பைச் சுமத்திக் குற்றம் காண்பது நாடுகள் தங்களுக்கு இடையே தொற்று நோய்கள் மற்றும் மரபுவரிசை ஆய்வுகள்(epidemiological and sequencing data) சம்பந்தமான தரவுகளை பரிமாறிக் கொள்வதைப் பாதிக்கலாம் என்று ஐ. நா. சபை எச்சரித்துள்ளது.
  • பிரான்ஸில் 47 ஆயிரம் தொற்று
இதேவேளை பிரான்ஸில் நேற்று மாலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரங்களில் 47 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்திருக்கிறார். நாட்டில் ஐந்தாவது கட்டத் தொற்றலை உச்சமடைந்துவருகிறது.

நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தடுப்பூசி மற்றும் சுகாதாரப் பாஸ் நடைமுறைகள் காரணமாகவே உயிரிழப்புகள் மற்றும் தீவிர
நோய் நிலைமைகள் குறைந்துள்ளன என்று குறிப்பிட்டார். எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும்
அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post