அடுத்த மாதம் பிரான்சில் 10 முக்கிய மாற்றங்கள்!


மாதந்தோறும் பிரான்சில் பல மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், பிப்ரவரி மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வோம்.

1. ஓய்வு பெற்றவர்களுக்கு 100 யூரோக்கள் கூடுதல் போனஸ்

பிரான்சில் மாதம் ஒன்றிற்கு 2,000 யூரோக்களுக்குக் குறைவாக ஓய்வூதியம் பெறும் சுமார் 12 மில்லியன் ஓய்வு பெற்றவர்கள், பிப்ரவரியில் கூடுதலாக 100 யூரோக்கள் பெற இருக்கிறார்கள்.

இந்த தொகை, வழக்கமாக வழங்கப்படும் ஓய்வூதியத்தொகையுடன் வழங்கப்படாமல், மாத இறுதியில் தனியாக வழங்கப்படும்.

2. கொரோனா விதிகள் எளிதாக்கப்பட உள்ளன

பிப்ரவரி 2ஆம் திகதி முதல் பிரான்ஸ் அரசு கொரோனா விதிகளை நெகிழ்த்த உள்ளது. வெளியிடங்களில் மாஸ்க் அணியத் தேவையில்லை, வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமல்ல, பரிந்துரை மட்டுமே என்பது போன்ற மாற்றங்கள் அவற்றில் அடங்கும்.

உள்விளையாட்டு அரங்கங்கள் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கங்களில் எத்தனை பேர் கூடுவது என்பது தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட உள்ளன. ஆனால், இந்த இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம்.

பிப்ரவரி 15 வரை, ஏற்கனவே தங்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என நிரூபிக்கும் பட்சத்தில், அவர்கள் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெறுவதாக உறுதி அளித்தால், அவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி பாஸ் வழங்கப்படும்.

பிப்ரவரி 16 ஆம் திகதியிலிருந்து இரவு விடுதிகள் திறக்கப்படும்.

3. Livret A சேமிப்புக் கணக்கில் வட்டி வீதம் இரட்டிப்பாகிறது

10 ஆண்டுகளில் முதன்முறையாக, பிப்ரவரி 1 முதல், Livret A சேமிப்புக் கணக்கில் வட்டி வீதம் இரட்டிப்பாகிறது. அதாவது 0.5 சதவிகிதத்திலிருந்து அது 1 சதவிகிதமாக உயர உள்ளது.

4. சொத்து வைத்திருப்போர், வாடகை வருவாய் குறித்த தகவல்களை அரசுக்கு தெரிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட உள்ளது

5. சுங்கச்சாவடிக் கட்டணம் உயர உள்ளது

ஆண்டுதோறும் பிப்ரவரியில் நடப்பதைப்போல, இந்த பிப்ரவரி மாதம் முதலும், சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கச் சாவடிக் கட்டணம் (tolls on roads) அதிகரிக்கப்பட உள்ளது. ஆனால், இம்முறை அது 2 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரிக்க உள்ளது.

6. டெக்சி கட்டணத்தில் மாற்றமில்லை

குறைந்தபட்ச டெக்சி கட்டணம் 7.30 யூரோக்களாகவே நீடிக்கிறது..

7. மின்சார கட்டண உயர்வு

பிப்ரவரி 1 முதல் மின்சாரக் கட்டணம் 44.5 சதவிகிடம் வரை அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவிய நிலையில், அது அரசு தலையிட்டு, வெறும் 4 சதவிகிதம் மட்டுமே உயர வழிவகை செய்துள்ளது.

8. பள்ளி விடுமுறைகள்

நாடு முழுவதிலும், பிப்ரவரியில் பள்ளி விடுமுறைகள் துவங்க உள்ளன.

9. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு

சிறிய நகரங்களுக்கு பிப்ரவரி 19 வரையிலும், பெரிய நகரங்களுக்கு பிப்ரவரி 26 வரையிலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர இருக்கிறது.

10. அதிகாரப்பூர்வ விற்பனை முடிவுக்கு வருகிறது

‘Soldes’ என்னும் அதிகாரப்பூர்வ விற்பனை பிப்ரவரி 8உடன் முடிவுக்கு வருகிறது. விற்பனை முடிவுறும் நேரத்தில், 70 சதவிகிதம் வரை தள்ளுபடி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous Post Next Post