கனடா - அமெரிக்கா இணைப்புப் பால முற்றுகையை அகற்றத் தொடங்கினர் பொலிஸார்! (வீடியோ)


கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரதான எல்லைக் கடவையான ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலிஸார் அகற்றத் தொடங்கியுள்ளனர்.

கனடாவின் கட்டாய தடுப்பூசி ஆணை உள்ளிட்ட கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான சரக்கு வாகன சாரதிகள் அம்பாசிடர் பாலம் உள்ளிட்ட எல்லைக் கடவைகளை முற்றுகையிட்டுள்ளதுடன், தலைநகர் ஒட்டாவாவையும் முடக்கும் வகையில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவுடனான முக்கிய எல்லைக் கடவைகளை முடக்கும் வகையிலான போராட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தடை உத்தரவு உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் அமுலுக்கு வந்தது.

வின்ட்சர் நகர நிர்வாகம் மற்றும் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றினால் இந்த தடை உத்தரவு கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 50 மில்லியன் டொலர் வரை இழப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் வாதிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, எல்லைக் கடவைகளை முற்றுகையிடுவது கிரிமினல் குற்றம் என்பதை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தெளிவுபடுத்தி வின்ட்சர் பொலிஸார் அறிக்கை வெளியிட்டனர்.

தடை உத்தரவை மீறுவோரின் வாகனங்கள் கைப்பற்றப்படும். அத்துடன், தடையை மீறும் வாகனங்கள், வாகன சாரதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாத நிலை ஏற்படும் எனவும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஒன்ராறியோவில் உள்ள அம்பாசிடர் பாலத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை பொலிஸார் அகற்றத் தொடங்கியுள்ளனர்.

சரக்கு வாகன சாரதிகளின் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடை உத்தரவை அமுல் செய்யுமாறு பொலிஸாரை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து நேற்று சனிக்கிழமை போராட்டக்காரர்களை அகற்றுவதில் ஆரம்பத்தில் பொலிஸார் வெற்றி கண்டனர். எனினும் போராட்டக்காரர்கள் அதிகளவில் கூடியதால் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் சட்டத்தைப் பேணி, அமைதியான முறையில் செயற்படுமாறு அனைத்து ஆர்ப்பாட்டக்காரர்களையும் பொலிஸார் கோரினர். ஆர்ப்பாட்டங்களால் பிறருக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதே நேரத்தில் நாட்டின் தலைநகரான ஒட்டாவாவின் மையத்தில் நேற்றும் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் வெள்ளிக்கிழமை எல்லைத் தடைகள் குறித்து பேசினார்.

அமெரிக்க-கனடா சரக்கு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 25% பங்கு வகிக்கும் அம்பாசிடர் பாலத்திற்கு ஒரு வார காலமாக தொடரும் இடையூறுகளால் கனடாவின் கார் உற்பத்தித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட், டொயோட்டா மற்றும் ஹோண்டா தொழிற்சாலைகள் முற்றுகையால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post