ரஷ்யா - உக்ரைன்போர் தொடங்கி 12 நாட்கள்! போர்க் குற்ற விசாரணை ஆரம்பம்!!


  • குமாரதாஸன். பாரிஸ். 
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போருடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court -ICC)தலைமை வழக்கறிஞர், போர் குற்றங்கள் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்று அறிவித்திருக்கிறார். ஜேர்மனியிலும் உக்ரைன் போர் குற்றங்கள் தொடர்பில் தனியான விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைனில் 2014 முதல் ரஷ்யா புரிந்து வந்த போர் தொடர்பாகவும் தற்சமயம் இடம்பெறுவதாக நம்பப்படுகின்ற புதிய போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை உள்ளடக்கியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் கரீம் ஹான் (Karim Khan) தெரிவித்திருக்கிறார்.

விசாரணைகள் எவ்வளவு கதியில் முன்னெடுக்கப்பட்டாலும் புடினை சர்வதேச
நீதிமன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துவது சாத்தியமா என்ற முக்கிய கேள்வி இதில் உள்ளது. சாத்தியமான போர்க் குற்றங்களை அடையாளம் காண்பது உட்பட மேலும் பல சட்டச் சிக்கல்கள் தாண்டப்பட்ட பிறகே அனைத்துலக விசாரணை என்பது முன்னோக்கி நகர முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உக்ரைனின் மரியுபோல் நகரில் மகப்பேற்று மற்றும் சிறுவர் மருத்துவமனை
ஒன்று சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டுள்ளது. சிறுவர் உட்பட சிவிலியன்
உயிரிழப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ரஷ்யா மீது உக்ரைன் அதிபர் போர்க் குற்றம் சுமத்தியிருக்கிறார். இந்தத் தாக்குதல் தொடர்பான செய்திகளுக்கு மேற்குலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலையும் இதுபோன்ற சிவிலியன்கள் மீதான வேறு சில குண்டு வீச்சுச் சம்பவங்களையும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களது பாவனையையும் போர்க்குற்றங்களாகக் கருதத்தக்கவையா என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் சட்ட நிபுணர்கள் ஈடுபட்டுவருகின்றனர். ஐசிசி என்கின்ற சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் 123 உறுப்பு நாடுகளில் 39 நாடுகள் உக்ரைன் போர்க் குற்றங்கள் குறித்து உடனடி விசாரணையைத் தொடக்குமாறு கூட்டாகக் கேட்டுள்ளன.

இதேவேளை, ஜேர்மனியின் சமஷ்டி சட்டவாளர் அலுவலகமும்(federal prosecutor)
ரஷ்யா மீதான போர் குற்றங்கள் சார்ந்த விசாரணைகளைத் தொடக்கியுள்ளது என்ற தகவலை அந்நாட்டின் நீதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான ஆயுத மோதலில் சர்வதேச சட்டங்களை மீறுகின்ற வகையில் குற்றங்கள் இடம்பெறுகின்றனவா என்பதை அறிவதற்கான கட்டமைப்பு விசாரணை (structural investigation) ஒன்றை சமஷ்டி சட்டவாளர் ஆரம்பித்திருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post