பிரான்ஸ் - பாரிஸ் நகரில் உள்ள துருக்கி தூதரகம் மீது தாக்குதல்!

பிரான்ஸ் - பாரிஸ் நகரில் உள்ள துருக்கி துணைத் தூதரகம் மீது பட்டாசு வகை வெடிமருந்துகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தூதரக கட்டடத்தின் ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளன.

வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவு அமைச்சு, தாக்குதல் தொடர்பாக விளக்கமளிக்குமாறு , அங்காராவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் துணைச் செயலாளரை நேற்று வெள்ளிக்கிழமை அழைத்தது.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று துருக்கிய வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு கூறினார்.

பிரான்ஸின் உறுதியான நடவடிக்கைகளை காண நாங்கள் விரும்புகிறோம் என இஸ்தான்புல்லில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் (PKK) இணைந்த குழுக்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

துருக்கியால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி, துருக்கிய அரசாங்கத்திற்கு எதிராக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக கிளர்ச்சியில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post