பிரான்ஸில் அரிசிக்குத் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பு! அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது அரிசி ஆலைகளின் ஒன்றியம்!!

பிரான்ஸின் அரிசி ஆலைகளின் ஒன்றியம் (Syndicat de la Rizerie Française) அரிசித் தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்புக் குறித்த எதிர்வு கூறலை வெளியிட்டிருக்கிறது. பெரும் அரிசி உற்பத்தி நாடுகளில் சமீபகாலங்களில் ஏற்பட்ட பருவநிலை மாறுதல்களின் விளைவாக நெல் விளைச்சல் பெருமளவில் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதன் தாக்கத்தால் அடுத்து வருகின்ற மாதங்களில் உலகின் அரிசிக் கையிருப்புத் தீர்ந்து போகலாம் என்று ஒன்றியம் எச்சரித்துள்ளது.

நாட்டில் அரசி நெருக்கடி அறுவடைக் காலமாகிய வரும் பெப்ரவரி - மார்ச் மாத காலப் பகுதியில் தொடங்கலாம். அப்போது கடைகளில் முற்று முழுதாக அரிசி தீர்ந்துபோகாது விட்டாலும் எதிர்காலத்தில் விநியோகங்களுக்கு விலை அதிகரிப்பைச் செய்ய நேரிடும் என்று அரிசி ஆலைகளின் ஒன்றியத் தலைவர் தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் வருடாந்தம் 50 ஆயிரம் தொன் அரிசியை உற்பத்தி செய்கிறது.

ஆனால் நாட்டின் பெரும் சந்தைகளில் 2ஆயிரத்து 40 ஆயிரம் தொன் அரிசி ஆண்டுதோறும் விற்பனையாகிறது. பல காரணங்களால் வருடாந்த அரிசி உற்பத்தி இம்முறை பெரு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக அரிசி இறக்குமதி தடைப்படுமாக இருந்தால் உள்நாட்டில் அதற்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உற்பத்தியாகின்ற பாசுமதி அரிசியே (basmati rice) பிரான்ஸில் 45 சதவீதம் நுகரப்படுகிறது. இவ்விரு நாடுகளிலும் சமீப நாட்களில் ஏற்பட்ட கடும் வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்குப் போன்றன நெற்தானிய விளைச்சலைப் பலமாகத் தாக்கியிருக்கின்றன. சுமார் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் தொன் (250,000 tonnes) நெல் வகைகள் அழிந்துள்ளன. இந்த நிலைவரம் காரணமாக இவ்விரு நாடுகளும் தத்தமது சொந்த மக்களது நலனைக் கருத்தில் கொண்டு அரிசி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளன.

பாசுமதி மட்டுமன்றி ஐரோப்பாவில் நுகரப்படுகின்ற ஏனைய பல அரிசி வகைகளும் ஆசிய நாடுகளிலேயே உற்பத்தியாகின்றன. அந்த நாடுகள் பலவும் எரிசக்தி நெருக்கடி, காலநிலைப் பாதிப்பு என்று பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. அதனால் உலகளாவிய அரிசி உற்பத்தியும் ஏற்றுமதியும் பெரும் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளன.

உக்ரைன் போர் உலகின் தானியத் தன்னிறைவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கோதுமை, சோளம் போன்றவற்றுக்கு உலக அளவில் தட்டுப்படு ஏற்பட்டுள்ளது. அது மனித உணவுத் தேவைகளை மட்டுமன்றி கால்நடைகளுக்கான தீவனங்களினது உற்பத்தியையும் பாதித்துள்ளது.

சீனா போன்ற நாடுகள் கால்நடைத் தீவனத் தேவைகளுக்கான அரிசியை ஆசிய நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய முயன்று வருகின்றன. இதுவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணமாகியு ள்ளது.
Previous Post Next Post