நோயுற்ற பெற்றோர்... கருவுற்ற மனைவி... வருமானம் தேடிக் கொரியா வந்து உயிரிழந்த இலங்கை இளைஞனின் துயரக் கதை!

இலங்கையின் கண்டிப் பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஜினத் (Jinath) தனது தோளில் பெரும் குடும்பச் சுமையுடனையே தென்கொரியாவுக்கு வந்திருக்கிறான். பாத்திமாவுடன் (Fatima) எட்டு வருடக் காதல். பெற்றோரின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் கடந்த ஜுலையில்தான் திருமணம், கருவுற்ற நிலையில் மனைவி. புற்றுநோய் பாதித்த தாயார், நீரிழிவு நோயாளியான தந்தை.. இப்படியான குடும்பப் பின்புலம் அவனை வருமானம் தேடி வெளிநாட்டுக்கு விரட்டியது.

ஜினத் சியோலுக்கு வந்து தொழில் தொடங்கியதும் மனைவி பாத்திமாவை அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அழைத்துப் படிப்பிப்பதற்கான முயற்சிகளைத் தொடக்கியிருந்தான். தாயின் புற்றுநோயைக் குணப்படுத்துவதும் வீடு ஒன்றைக் கட்டுவதும் அவனது கனவாக இருந்தது. ஆனால் அவை அனைத்துமே அந்தக் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாகக் கலைந்து போயின..

ஜினத்தின் நண்பர்களும் கூடத் தொழில் புரிகின்றவர்களும் இந்தத் தகவல்களை எல்லாம் "கொரியா ஹெரால்ட்" செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருக்கின்றனர்.

ஜினத்தைப் போலன்றி உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்பதற்காகச் சியோல் நகருக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டு இளைஞர், யுவதிகள் பலரும் கூடத் தங்கள் பதின்ம வயதுக் கனவுகளுடன் உயிர்துறந்திருக்கின்றனர். அவர்களில் மிக அதிகமானோர் பெண்கள். இறந்தவர்களில் ஆகக் குறைந்த வயதுடையவர் என்று கூறப்படும் 15 வயதுடைய சிறுமி தனது தாயார், அன்ரி சகிதம் நகருக்கு வந்திருந்தார். அவர்கள் மூவரது சடலங்களும் சியோல் நகரத்து மலர்ச்சாலைகளில் அருகருகே வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

ஜினத் எவ்வாறு சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றான் என்பது நண்பர்களுக்குப் புரியவில்லை. இரவு விடுதிகள் அமைந்த அந்தப் பகுதிக்குச் செல்லும் வழக்கம் எதுவும் அவனிடம் கிடையாது.

சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு மேலாகியும் அவன் இருப்பிடம் திரும்பாததை அடுத்து அவனது ஃபோனுக்கு ஏராளமான அழைப்புக்கள் எடுக்கப்பட்டன. எதற்கும் பதில் இல்லை. தகவல்களை அறியும் நிலையங்களுடன் தொடர்பு கொண்ட நண்பர்களுக்குப் "பொறுங்கள்" என்ற பதில் மட்டுமே கிடைத்தது. மறுநாள் நகரில் உள்ள நிலக் கீழ் ரயில் நிலையம் ஒன்றில் அவனது கைத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு சியோலில் உள்ள சிறிலங்கா சமூகத்தினர் அவன் அங்குள்ள மருத்துவமனை (Boramae hospital) ஒன்றில் இருக்கிறான் என்ற தகவலைத் தெரிவித்தனர். ஆனால் அங்கு அவன் உயிருடன் இல்லை என்பது பின்னரே தெரியவந்தது.

தென் கொரியத் தலைநகர் சியோலில் இதாவோன் (Itaewon) பகுதியில் நேர்ந்த நெரிசலில் இள வயதினர் 156 பேர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய துயரம் இன்னமும் தணியவில்லை. நாடு முழுவதும் நவம்பர் 5வரை தேசிய துக்கத்தை அரசு அறிவித்திருக்கிறது.

பிள்ளைகளின் சடலங்களுக்கு முன்னால் பெற்றோர்கள் கதறும் காட்சிகளையே எங்கும் காண முடிவதாகச் செய்தியாளர்கள் விவரிக்கின்றனர்.

அமெரிக்கா, பிரான்ஸ், சிறிலங்கா சீனா என்று வெளிநாட்டவர்கள் பலரும் உயிரிழந்தவர்களில் அடங்குவதால் தவிர்த்திருக்கக் கூடிய அந்த அனர்த்தத்துக்காகத் தென் கொரிய அரசு மீது சர்வதேச ஊடகங்கள் கடுமையான விமர்சனங்களைப் பொழிந்துதள்ளி வருகின்றன.

மிக ஒடுக்கமான ஒழுங்கை ஒன்றினுள் சிறிது நேர இடைவெளிக்குள் ஆயிரக் கணக்கான இளையோர் சிக்குண்டு - நெரியுண்டு - மூச்சுத் திணறி உயிரிழந்தமைக்கான மூல காரணத்தைக் கண்டறிய முடியாமல் அதிகாரிகள் ஆடிப்போய் உள்ளனர். பெரும் கூட்டம் கூடுவது தெரிந்தும் அதைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்கான எந்தவித ஒழுங்குகளையும் செய்யாமல் வாய் பார்த்து நின்றதற்காக நாட்டின் பொலீஸ் துறை மீது பாரதூரமான பழிகள் சுமத்தப்பட்டுள்ளன. தவறை ஒப்புக் கொண்டு உள்துறை அமைச்சர் நாட்டு மக்களிடம் சிரம்தாழ்த்தி மன்னிப்புக் கோரியிருக்கிறார். மரண நெரிசலுக்கான மூல காரணத்தைக் கண்டறிவதற்குக் குழு ஒன்றை அமைத்துள்ள நாட்டின் எதிர்க் கட்சி, பொறுப்புத்தவறியமைக்காக அதிபர் பதவி விலக வேண்டும் என்று கேட்டிருக்கிறது.

ஜினத்தின் உடலை எப்படியாவது என்னிடம் சேர்த்து விடுங்கள் என்று அவனது இளம் மனைவி கெஞ்சுகிறார் என்ற தகவலை இலங்கையில் உள்ள உறவினர் ஒருவர் சியோல் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறார்.சடலத்தை நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளுக்காக சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் அவனது நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

சன நெரிசல் நிகழ்ந்த இதாவோன் (Itaewon) பகுதியில் உள்ள உள்ளரங்கு ஒன்றில் 250 க்கும் அதிகமான ஜோடிச் சப்பாத்துகள், மற்றும் காலணிகள் உரிமை கோருவோர் இன்றி வரிசையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று ஜினத்தினுடையதாக இருக்கக் கூடும்.
Previous Post Next Post