யாழில் போதைக்கு அடிமையாகிய ஆசிரியர்! புனர்வாழ்வு நிலையம் அமைக்கப் பரிந்துரை!!

யாழ்.மாவட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கான நிலையம் ஒன்றனை அமைக்க சுமார் 10 ஏக்கர் காணி வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதை பொருள் தடுப்புத் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தொிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரினதும் வேண்டுகோள்.

அதன் பிரகாரம் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புனர்வாழ்வு நிலையத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான சுமார் 10 ஏக்கர் அரச காணியை வழங்குவதற்கு பரிந்துரைத்துள்ளோம்.

மேலும் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான செயத்திட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானமை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அண்மையில் ஆசிரியர் ஒருவரும் போதைக்கு அடிமையாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

போதைப் பொருள் அடிமையாகும் மாணவர்களை பாடசாலையில் இருந்து இடை நீக்கம் செய்வது ஏனைய மாணவர்களுக்கு பாதுகாப்பு என பாடசாலைகள் சில சிந்திக்கின்றன. ஆனால் மாணவர்களை இடை நிறுத்திவிடுவதால் மட்டும் பாடசாலைகளில் போதைப் பொருள் பிரச்சனை கட்டுப்படுத்தி விடமுடியாது.

பாடசாலைகளில் ஆன்மீக செயற்பாடுகள் மதபோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதன் மூலம் ஒழுக்கமான சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும். ஆகவே யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் அனைவருடைய பங்களிப்பும் வெகுவாகக் கிடைத்து வருகின்ற நிலையில் தொடர்ச்சியாக அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என அரச அதிபர் மேலும் கேட்டுக் கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன், யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன், உளநல மருத்துவ நிபுணர்கள், பிரதேச சபைகளுடைய தவிசாளர்கள், பிரதேச செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், முப்படையினரனர், மற்றும் மதத்தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post