யாழில் பரபரப்பை ஏற்படுத்திய விஜிதாவின் மரணம்! பெற்றோர் வெளியிட்டுள்ள சந்தேகம்!!

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்க வேண்டும் எனவும் உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் பரபரப்பை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தில் யாழ். குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான விஜிதா என்ற குடும்பப் பெண்ணே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் கடமையாற்றி வந்தவர் என கூறப்படுவதுடன், பெண்ணுக்கு 10 வயதான பெண் பிள்ளை ஒன்றும் உள்ளது.

அதேவேளை சுகிர்தன் தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை தலைவரும் நீண்ட காலத்தின் முன்னரே திருமணமாகியவர் எனவும் அவரது மகன் ஒருவர் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் கூறப்படுகின்றது.

சுகிர்தனின் மனைவி கடந்த 2020ம் ஆண்டு தனது இரு பிள்ளைகளுடன் வெளிநாடு சென்று தனித்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

இந் நிலையில் உயிரிழந்த விஜிதாவின் வீட்டிலேயே தவிசாளர் உணவருந்துவதாகவும் அந்த பெண்ணின் பிள்ளையை வெளியிடங்களிற்கும் கல்வி நடவடிக்கைக்கும் அழைத்து செல்வதாகவும் விஜிதாவின் பெற்றோர் கூறுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பில் விஜிதாவின் தந்தை மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 16ஆம் திகதி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை எடுத்து கொண்டு தனது தோழி ஒருவர் பெற்றோல் இன்றி வீதியில் இடைநடுவில் நிற்பதாகவும், அவருக்கு பெற்றோலை வழங்கி விட்டு வருவதாகவும் கூறியே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் விஜிதா.

இரவு 1 மணிவரை வீடு திரும்பாத விஜிதாவிற்கு பலமுறை தொலைபேசி அழைப்பை எடுத்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் இரவு 1.30 மணியளவில் அவரது மகனும் மற்றுமொரு நபரும் வீட்டிற்கு வந்து இவ்வாறு மகள் தீ மூட்டிகொண்ட நிலையில் உயிருடன் அவரை தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்து கொண்டு மகளை வைத்தியசாலையில் பார்க்க சென்றுள்ளார் தந்தை.

மகள் 10 மணிக்கு வீட்டில் இருந்து துவிச்சக்கரவண்டியில் சென்றாள். எனவே 3 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து மகள் 10.30க்கு அங்கு சென்றிருப்பாள். அதற்கு பிறகு அவள் தீமுட்டி கொண்டுள்ளாள். ஆனால் எங்களுக்கு அவர் எதுவும் சொல்லவில்லை. எங்களுடைய தொலைபேசி இலக்கம் அவரிடம் உள்ளது.

அதோடு அவள் தன்னுடன் (சுகிர்தன்) எதுவும் கதைக்காமல் இப்படி செய்து கொண்டதாக தெரிவித்திருக்கின்றார். அவள் அப்படி செய்திருக்க மாட்டாள் என்கிறார் விஜிதாவின் தாயார்.

எனவே தனது மகளின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என மன்றாடுகின்றனர் விஜிதாவின் பெற்றோர்.

மேலும், விஜிதா தற்கொலை செய்தாரா அல்லது குற்றச்செயல்கள் நடந்ததா என்பது உறுதியாகாத நிலையில் தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

பொலிஸ் நிலையத்தில் பெண் தற்கொலைக்கு முயன்றதற்கான சாட்சியங்கள் தென்பட்டதையடுத்து தவிசாளர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post