2 ஆயிரம் ரூபாய்க்காக நடந்த 6 கொலைகள்! நெடுந்தீவு சம்பவம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் அண்மையில் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் 2000 ரூபா தொடர்பான முரண்பாடு ஒன்றே காரணம் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் படி, 2000 ரூபா திருட்டை மறைக்கவே இந்த ஆறு கொலைகளும் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 22 ஆம் திகதி இந்த படுகொலை சம்பவம் நடந்திருந்தது. நெடுந்தீவு இறங்கு துறைமுகத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் ஐந்து பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும், 101 வயதான பெண்மணி ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில், யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் புங்குடுத் தீவை சேர்ந்த 51 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்தவர்கள் அனைவரும் 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை நடந்த வீடு சுற்றுலா பயணிகளுக்கு அறை வழங்கும் வீடு என பொலிஸார் அவதானித்துள்ளனர். இதனை பொலிஸார் விஷேட விடயமாக பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வீடு 83 வயதான கார்த்திகேசு நாகசுந்தரி எனும் பெண்ணுக்கு சொந்தமானது. கணவன் இறந்த நிலையில் அந்த வயோதிப பெண் தனியாகவே அவ்வீட்டில் வாழ்ந்துள்ளார்.

அவருக்கு பிள்ளைகள் எவரும் இல்லாத நிலையில், கணவரின் சொத்துக்கள் மற்றும் தமது சகோதர சகோதரிகள் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் என்பனவற்றைக் கொண்டு அவர் நிறைவான வாழ்வொன்றினையே வாழ்ந்து வந்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து வந்ததாக கூறப்படும் 78 வயதான வேலாயுதம் பிள்ளை நாகேந்திர ரத்னம், உறவினர்களான முல்லை தீவு – பாண்டியன் குளத்தை சேர்ந்த 75 வயதுடைய நாகதாதி பாலசிங்கம் அவர் மனைவி 72 வயதுடைய பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, அயலவரான 75 வயதுடைய சுப்ரமணியம் மகேந்திரன் ஆகியோரின் சடலங்களே வீட்டில் வெட்டுக் காயங்களுடன் காணப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு முக்கிய தகவல் ஒன்று கிடைத்தது.

கொலை நடந்ததாக நம்பப்பட்ட ஏப்ரல் 22 ஆம் திகதி அந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டவர்களுக்கு மேலதிகமாக வழுக்கைத் தலையுடன் கூடிய குட்டையான ஒருவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையிலேயே, புங்குடுத்தீவை சேர்ந்த 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், சந்தேகநபர் கொள்ளையிட்டுச் சென்ற நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பொலிஸாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சபாரத்னம் ரகு ஜெர்மனியில் 25 வருடங்களாக வசித்தவர் ஆவார். எனினும், தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் அவர் நாடு கடத்தப்பட்டார்.

ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் சென்ற ரகு அங்கிருந்தும் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

வெளிநாட்டில் இருந்த போது சிறந்த வருமானத்தை கொண்டிருந்த அவர் இலங்கை திரும்பியதும் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், ரகு கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் 13 வரை நெடுந்தீவில் உள்ள அறைகள் வாடகைக்கு விடப்படும் ஒரு இடத்தில் தங்கியிருந்துள்ளார்.

ஏப்ரல் 13 ஆம் திகதி புதுவருட கொண்டாட்டங்களுக்காக அங்கிருந்த அனைவரும் சென்றுள்ள நிலையில், ரகுவையும் செல்ல அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

செல்ல முன்னர் ரகுவிடம், இதுவரை தங்கியமைக்காக 7000 ரூபாவை கட்டணமாக செலுத்த உரிமையாளர் கேட்டுள்ளதுடன், தான் நிலத்திலேயே உறங்கியதாக கூறி 6000 ரூபாவையே ரகு கொடுத்துள்ளார்.

பின்னர் நெடுந்தீவில் சில பகுதிகளில் அவ்வப்போது தங்கியிருந்துள்ள ரகு கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி, தனது ஊரான புங்குத்தீவுக்கு செல்ல தயாராகி மாவலி இறங்கு துறைக்கு சென்றுள்ளார்.

அவர் செல்லும் போதும் படகு புறப்பட்டுவிட்டதால், மறு நாள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறங்குதுறையை அண்மித்தே கார்திகேசு நாகசுந்தரியின் வீடு அமைந்துள்ள நிலையில், தூரத்து உறவினரான அவ்வீட்டுக்கு ரகு சென்றுள்ளார்.

படகு தவறவிடப்பட்ட விடயங்களை கேட்டு, அவர்களும் ரகுவை வீட்டில் தங்க அனுமதித்துள்ளனர். இதன்போது, அந்த வீட்டில் பிரித்தானியாவில் இருந்து வந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் இருப்பதை ரகு அவதானித்துள்ளார்.

இந்நிலையில், புங்குடுத் தீவு நோக்கி செல்ல 2000 ரூபா தருமாறு ரகு நாகசுந்தரியிடம் கேட்டுள்ளார். எனினும் நாகசுந்தரி, அவரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே 22 ஆம் திகதி அதிகாலை நெருங்கும் வேளையில், அவ்வீட்டில் முல்லை தீவு பகுதியில் இருந்து வந்த தம்பதியினர் உறங்கும் அறைக்கு சென்று, 2000 ரூபாவை எடுக்க ரகு முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பாலசிங்கம் விழித்துக்கொள்ளவே, திருடன் திருடன் என அவர் சத்தமிட்டுள்ளார். இதன்போதே அங்கிருந்த கத்தியை பயன்படுத்தி சந்தேகநபரான ரகு, பாலசிங்கத்தை வெட்டியுள்ளார்.

சத்தம் கேட்டு அருகே உறக்கத்திலிருந்த பாலசிங்கத்தின் மனைவி விழித்துக்கொள்ளவே அவரையும் வெட்டியுள்ளார்.

சத்தம் காரணமாக வேறு அறையில் உறங்கிக்கொண்டிருந்த வீட்டு உரிமையாளர் நாகசுந்தரி, பிரித்தானிய பிரஜையான மூதாட்டி ஆகிய இருவரும் வரவே, பாலசிங்கம் தம்பதியினர் இரத்த வெள்ளத்தில் மிதப்பதையும் ரகு கத்தியுடன் இருப்பதையும் அவதானித்துள்ளனர்.

பின்னர் அவ்விருவரும் வீட்டின் பின் புறம் நோக்கி ஓடி ஒழிய முற்பட்ட போதிலும், அவர்களையும், விரட்டிச் சென்று ரகு வெட்டியுள்ளார்.

பின்னர் 101 வயது மூத்தாட்டியையும் படுக்கையிலேயே வைத்து வெட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்தே, பணம், நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல ரகு தயாராகியுள்ளார்.

எனினும் நெடுந்தீவிலிருந்து – குறிகட்டுவானுக்கு காலை 7.00 மணிக்கே படகுச் சேவை இருந்ததால் அதுவரை ரகுவுக்கு காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலை 5.30 மணியளவில், அயல் வீட்டுக்காரான, சுப்ரமணியம் மகேந்திரன் அங்கு வந்துள்ளார். அவரையும் ரகு வெட்டி கொலை செய்துள்ளார்.

அதன் பின்னர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அணிந்திருந்த சாரத்தை வீட்டின் பின் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.

இது குறித்து ரகு அளித்த வாக்கு மூலத்தின் பிரகாரம் அவற்றை பொலிஸார் மீட்டனர்.

இக்கொலைகளை செய்த போது குரைத்த நாயொன்றினையும் ரகு கத்தியால் வெட்டி காயப்படுத்திய நிலையில் அந்நாயும் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், புங்குடுத்தீவில் வைத்து சந்தேகநபரான ரகு கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போது ரகு, ஆறு கொலைகளுக்காக ஊர்காவற்றுரை நீதிவானின் உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post