பிரான்ஸில் மருத்துவக் காப்புறுதி அட்டை (carte vitale) தேசிய அடையாள அட்டையோடு இணைக்கப்படும்!

பிரான்ஸில் மருத்துவ சிகிச்சைத் தேவைகள் அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற "carte vitale" எனப்படும் காப்புறுதி அட்டையை நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்படுகின்ற தேசிய அடையாள அட்டையோடு (carte d'identité) இணைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

அரசின் இலவச மருத்துவக் காப்புறுதி சேவைகளைப் பெற்றுக் கொள்வதில் இடம் பெற்று வருகின்ற ஆள் மாறாட்டம் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவலை, சமூகநல உதவி சேவைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் கப்ரியேல் அட்டால் (Gabriel Attal) பத்திரிகைச் செவ்வி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

நீண்ட கால நோக்கில் மருத்துவக் காப்புறுதி அட்டைகளை இல்லாமற் செய்து அதன் சேவைகளை ஆள் அடையாள அட்டை ஊடாகவே பெற்றுக்கொள்ளத்தக்கதாக மாற்றங்களைச் செய்வதற்கு அரசு எதிர்பார்க்கின்றது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸில் "கார்ட் வித்தேல்" எனப்படுகின்ற இந்த அட்டை ஒருவர் தன்னை அரச சுகாதாரக் காப்புறுதி நிறுவனத்தில் பதிவு செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஆவணம் ஆகும். மருத்துவர்களை, மருத்துவமனைகளை, மருந்தகங்களை அணுகும் ஒருவர் அந்த அட்டையைச் சமர்ப்பித்தால் அவரது மருத்துவச் செலவை முழுமையாகவோ அன்றிக் குறிப்பிட்ட ஒரு சதவீதத்தையோ மீளப் பெறமுடியும்.

பிரான்ஸின் சமூக மருத்துவக் காப்புறுதி நிறுவனம் கட்டணத்தின் ஒரு பகுதியைச் செலுத்துகிறது. கார்ட் வித்தேல் சமர்ப்பிக்காமலும் அரச சுகாதார சேவைகளை அணுக முடியும். ஆனால் கட்டணத்தை அரச காப்புறுதி நிறுவனம் பொறுப்பேற்காது. நோயாளியே தனது கையால் பணம் செலுத்த நேரிடும்.

பச்சை நிறத்திலான அந்த அட்டை ஒருவரது மருத்துவத் தரவுகளை அணுகுவதற்கான இலக்கங்களை உள்ளடக்கியது. அதனை வைத்திருப்பவர் பிரெஞ்சுப் பிரஜையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பிரான்ஸில் சட்டபூர்வமாகத் தங்கி வாழ்கின்ற வெளிநாட்டவர்களும் அதனைப் பயன்படுத்துகின்றனர்.

மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கு இந்த அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்துவது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கப்ரியேல் அட்டால் கூறியிருக்கிறார். பிரான்ஸுக்கு வருகின்ற வெளிநாட்டவர்கள் மருத்துவத் தேவைகளுக்கு இங்கு வசிக்கின்றவர்களது கார்ட் வித்தேல் அட்டைகளை முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். அதே சமயம் இங்கு வசிப்போரும் பிறரது அட்டைகள் மூலமாக இலவச சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஆள்மாறாட்டங்கள் இடம்பெறுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 2.3 மில்லியன் அட்டைகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன - என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மோசடிகளால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்டுள்ள பெரும் நிதி இழப்பை தடுக்கும் நோக்கில் கார்ட் வித்தேல் தரவுகளை ஆள் அடையாளத்துடன் உறுதிப்படுத்துவதற்காகவே எதிர்காலத்தில் அதனைத் தேசிய ஆள் அடையாள அட்டையோடு இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு சட்டத்தின் ஊடாகவே இந்த இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விளக்கங்கள் இனிமேல்தான் தெரியவரும்.
Previous Post Next Post