யாழில் ரயிலை கவிழ்ப்பதற்குச் சதி! தடுத்ததால் தப்பியது பல உயிர்கள்!!

மல்லாகத்திற்கும் கட்டுவானுக்கும் இடைப்பட்ட பகுதியின் ரயில் பாதையில் உள்ள வளைவொன்றில் தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைக்கும் இருப்புக் கிளிப்புக்களை இனந்தெரியாதவர்கள் கழற்றி விட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில் திணைக்கள அதிகாரிகள் கழற்றப்பட்ட இருப்புக் கிளிப்புகளுக்கப் பதிலாக வேறு கிளிப்புகள் பொருத்தப்பட்டு ரயில் பாதை சீர் செய்துள்ளனர். இதனால் நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டினால் அவ் வழியாக வரும் ரயில் கவிழ்வதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களத்தினால் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இந்த நாசகார வேலையில் ஈடுபட்டோர் தொடர்பில் ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க இரும்புக் கிளிப்புகள் கழற்றப்பட்ட பகுதியில் குடிமனைகள் அதிகமாக இருப்பதால் ரயில் தடம்புரண்டிருந்தால் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post