பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரமடைந்த தாய்! குழந்தையைக் கொன்று விட்டுத் தானும் தற்கொலை!!

பெருந்துறை அருகே 2-வதும் பெண்ணாக பிறந்ததால் ஆத்திரமடைந்த தாய், 3 மாத குழந்தையை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சாவடிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40). விவசாயி. அவருடைய மனைவி சங்கீதா (34). இவர்களுடன் குணசேகரனின் தாய் சிந்தாமணியும் வசித்து வருகிறார்.  குணசேகரன்-சங்கீதா தம்பதிக்கு 9 வயதில் நிதர்சனா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறாள்.

கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் நிதர்சனாஸ்ரீ கோபி அருகே வெள்ளாங்கோவிலில் உள்ள குணசேகரனின் தங்கை வீட்டுக்கு சென்றாள். இந்த நிலையில் சங்கீதா தனக்கு முதலாவது பெண் குழந்தை உள்ளது. இதனால் 2-வதாக ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இதைத்தொடர்ந்து 2-வது முறையாக அவர் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் 3 மாதம் ஆகியும் அவர் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கவில்லை.

இதற்கிடையில் நேற்று மாலை குணசேகரன் விஜயமங்கலத்துக்கு சென்றுவிட்டார். தாய் சிந்தாமணி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விட்டார். வீட்டில் சங்கீதாவும், 3 மாத குழந்தையும் இருந்தனர்.

இந்த நிலையில் குணசேகரன் இரவு 7 மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்கு வெளியே உள்ள தண்ணீர் நிரம்பிய அண்டாவில் குழந்தை இறந்து கிடந்தது. இதனால் அவர் பதறியடித்தபடி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு சங்கீதா வீட்டின் விட்டத்தில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

2 பேரின் உடல்களையும் பார்த்து குணசேகரன் கதறி அழுதார். பின்னர் இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில்,

ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட சங்கீதாவுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தாய் சங்கீதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 3 மாத குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இதனால் மனம் உடைந்த சங்கீதா தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரிய வந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 3 மாத குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Previous Post Next Post
இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்