மாமனிதரின் புனித ஸ்தலத்தைப் போர்களமாக்காதீர்கள்! சசிகலா ரவிராஜுக்கு ஓர் அன்பு மடல்!!


மாமனிதர் நடராஜா ரவிராஜ் காலத்தாலும் அழிக்கப்படாத, தமிழ் மக்களின் மனங்களில் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள ஓர் புனிதமான ஆத்மா.

அவரின் பெயரால் தாங்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்தீர்கள். இத் தேர்தலில் உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகள் உங்களுக்கானவையல்ல. மாறாக மாமனிதருக்கானவை.

இது ஒருபுறம் இருக்க, உங்களின் விருப்பு வாக்கில் மோசடி செய்யப்பட்டதாலேயே நான் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படவில்லை என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.

உண்மையில் அவ்வாறு மோசடி செய்யப்பட்டு, உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் இதுவரை நாட்களில் நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கைகள் என்ன?


மாறாக ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதும், மாமனிதரின் சிலையின் முகத்தைக் கறுப்புத் துணியால் மறைத்து, அவ்விடத்தில் போராட்டம் நடத்துவதும் உங்களுக்கான நீதியினைப் பெற்றுத் தருமா?

பிற அரசியல் கட்சித் தலைவர்கள் உங்களை வந்து சந்திப்பதும், ஆறுதல் கூறுவதும் உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வாகுமா?

எனவே, சரியான சட்ட ஆலோசனை பெற்று உங்களுக்கு இழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அநீதிக்கு நீதித்துறையின்பால் சென்று நீதியைப் பெற்றுக் கொள்வதுதான் ஆரோக்கியமானதாக அமையும்.

அதைவிடுத்து, ஊடக அறிக்கை, போராட்டம் எனப் பின்தொடர்வீர்களானால் உங்களை நம்பி வாக்களித்த மக்களை நீங்கள் ஏமாற்றுவதாகவே அமையும். அத்துடன் இதுவரை நாட்களும் நீங்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஒரு பொய்யுரையாகவே பார்க்கப்படும்.


எனவே உங்கள் மீதும், மாமனிதர் மீதும் சேறுபூசும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமானால் நீங்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து உண்மையில் உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் சட்டத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்களைச் சந்தித்து அதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் செய்யாது விடின், உங்கள் கருத்துக்கள் பொய்யாக்கப்பட்டு விடும்.

அத்துடன் எதிர்காலத்தில் தேர்தல் நடைமுறைகளில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாதகமாகவும் அமையும் என்பதுடன், இனிவரும் காலங்களில் வாக்களிப்பு வீதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இது காரணமாக அமைந்துவிடும்.
Previous Post Next Post