
சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் மலைத்தொடரில்-பிரபல உல்லாச உச்ச மையமாகிய- கிரான்ட்ஸ் மொன்ரனாவில் (Crans-Montana) புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடப் பெரும் எண்ணிக்கையான பயணிகள் திரண்டிருந்த ஒரு அருந்தகத்தில்யே இந்த அனர்த்தம் நேர்ந்திருக்கிறது.
சுவிஸில் வலே (Valais) கன்ரன் பிராந்தியத்தினுள் அடங்கும் இந்தப் பகுதியில் "Le Constellation" என்ற பிரபல அருந்தகத்திலேயே இன்று அதிகாலை 01.30 மணியளவில் தீ பரவியது.
அருந்தகத்தின் உரிமையாளர் ஒரு பிரான்ஸ் பிரஜை என்று தெரிய வருகிறது.
டசின் கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கணக்கானவர்கள் எரிகாயங்களுடன் சுவிஸ் மற்றும் ஜேர்மனி, இத்தாலி நாட்டு மருத்துவமனைகளுக்குக் ஹெலிக்கொப்ரர்கள் மூலம்
எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தியை எழுதிய சமயத்தில் வந்த தகவல்களின் படி குறைந்தது நாற்பது பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்பு எங்கே, எப்படி ஏற்பட்டது என்ற விவரங்கள் எதுவும் உடனே தெரியவரவில்லை. ஆனால் வெடிப்பை அடுத்துப் பரவிய தீ அருந்தகத்தை முழுமையாகச் சூழ்ந்து எரியத் தொடங்கியது என்று நேரில் கண்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
அந்த வெடிப்பின் பேரோசை பனிச் சறுக்கல் விளையாட்டுத் திடலை உள்ளடக்கிய கிரான்ட்ஸ் மொன்ரனாப் பகுதி முழுவதையுமே அதிர வைத்தது என்று அங்கு தங்கியுள்ள உல்லாசப் பயணிகள் தங்களது அனுபவங்களை ஊடகங்களுக்கு விவரித்துள்ளனர்.
இந்தத் தீ விபத்தில் பிரெஞ்சுக் குடிமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர் என்ற தகவலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கிறது.