யாழில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர் தொடர்பில் வெளியான தகவல்கள்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டவர் குறித்த மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவருடன் தொடர்புபட்டவர்களுக்கான அவசர அறிவித்தலையும் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார்.

பருத்தித்துறையில் சற்று முன்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும்போதே அவர் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

நேற்று அடையாளம் காணப்பட்ட நபர், உடுவில் பிரதேச செயலகத்துக்கு அண்மையில் வசிப்பவர் என்றும் முச்சக்கரவண்டிச் சாரதியான அவருடன் பயணித்தவர்களும், அவர் மருதனார்மடம் சந்தையில் மரக்கறி விற்பனையில் ஈடுபட்டுவருகின்றமையால் அவரிடம் நெருங்கிப் பழகியவர்களும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் அவசரமாக தொடர்புகொள்ளுமாறும் கேதீஸ்வரன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் 370 பேருக்கு பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவற்றில் மருதனார்மடம் பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 38 வயதுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

அதன் தொடராக இன்று மருதனார்மடம் பகுதியில் 394 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் இன்று மாலை வெளிவரும். அதன் பின்னரே குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும்.

வடக்கு மாகாணத்தில் இந்த டிசம்பர் மாதத்தில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் ஐவர் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மூவர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள், இருவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று வரையில் வடக்கு மாகாணத்தில் 96 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் கொரோனா தடுப்பு வைத்தியசாலையில் தற்போது வரையில் 107 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post