02 ஆம் இணைப்பு: பிரான்ஸ் சென்ற இரு இலங்கை இளைஞர்கள் படகு விபத்தில் உயிரிழப்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரண்டாம் இணைப்பு:

ஆபிரிக்க நாடான மொரோக்கோ பகுதியில் இருந்து ஸ்பெயினுக்கு கடந்த 03.12.2020ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான படகில் பயணித்த 9பேர் இறந்துள்ளனர் இதில் இலங்கையை சேர்ந்த இருவர் உள்ளடங்குவதாகவும் அவர்கள் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த ப.பிரசன்னா வயது-27 மற்றும் கோதண்ட நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் வயது-23 ஆகிய இருவரது உடல்கள் மொரோக்கோவில் உள்ள ‘லைவான்’ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்துக்குள்ளான படகில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் அதில் ஒருவர் இலங்கையை சேர்ந்த காந்தன் இந்திரமோகன் என்பவரும் ஆவார்.

படகு விபத்தில் இறந்த இருவரது உடல்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகத்தின் ஊடாக இறந்தவர்களின் குடும்பத்தினர் உதவியை நாடியுள்ளார்கள் என தெரியவருகின்றது.

முதலாம் இணைப்பு:

வவுனியாவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஆபிரிக்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்ப்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன் கதைத்துள்ளார்.

அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வாரமளவில் மோரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் சாவடைந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணாமல் போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் உள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Previous Post Next Post