பிரான்ஸில் "பறக்கும் டாக்சி" சேவை! பரீட்சார்த்தப் பறப்பு ஜூனில்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பாரிஸ் பிராந்தியத்தில் நகரங்களுக்கு இடையே குறுந்தூர போக்குவரத்துக்கு 'பறக்கும் டாக்சிகள்' (Flying taxis) எனப்படும் சிறிய வான் ஊர்திகள் 2030 ஆம் ஆண்டு முதல் சேவைக்கு வரவுள்ளன.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக நகரங்களுக்கு மேலே சேவையில் ஈடுபடவுள்ள பறக்கும் டாக்சிகளின் முதலாவது பரீட்சார்த்த ஓட்டம் வரும் ஜூன் மாதம் பொந்துவாஸில் உள்ள ஓடு தளத்தில்
(Pontoise aerodrome) நடத்தப்படவுள்ளது.

பறக்கும் டாக்சி சேவையை நடத்துவதற்கான டாக்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அவற்றைத் தயாரிக்கின்ற 30 வெளிநாட்டு நிறுவனங்களை பாரிஸ் நகர போக்குவரத்து சேவையினர் தெரிவு செய்துள்ளனர்.

இந் நிறுவனங்களில் ஒன்றுக்கே பாரிஸ் நகர டாக்சி சேவையை நடத்தும் வாய்ப்புக் கிட்டும். இந்த நிறுவனங்களில் முதலாவதாக ஜேர்மனியின் 'வெலோகொப்ரர்' (Volocopter) நிறுவனத்தின் டாக்சிகளே எதிர்வரும் ஜூன் மாதம் பரீட்சார்த்தப் பறப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பயணப் பொதிகளுடன் இரண்டு பயணிகள், ஒரு விமானி என மூவர் செல்லக் கூடிய அந்த டாக்சிகள் மணிக்கு 110 கிலோ மீற்றர்கள் வேகத்தில், 400-500 மீற்றர்கள் உயரத்தில் பறக்கக் கூடியவை.

ஹெலிக்கொப்ரர், ட்ரோன் இரண்டினதும் தொழில்நுட்பங்களை இணைத்து தயாரிக்கப்படுகின்ற இந்த சிறிய வானூர்திகளை பாரிஸ் விமான நிலையங்களின் குழுமமும், RATP போக்குவரத்து சேவை நிறுவனமும் இணைந்து சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளன.

2024 இல் பாரிஸில் நடைபெறவிருக்கின்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் போது பாரிஸ் விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் டிஸ்னி லான்ட் போன்ற உல்லாச இடங்களுக்கு பறக்கும் டாக்சி சேவைகளை நடத்தப்போவதாக பிரான்ஸின் 'எயார் பஸ்' நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குமாரதாஸன், பாரிஸ்.
Previous Post Next Post