யாழில் சுகாதாரத்துறையினர் எனக் கூறி வீட்டுக்குள் நுழைந்து தாலிக்கொடி அறுத்த பெண்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பொதுச் சுகாதார பரிசோதகர் என்று பாசாங்கு செய்து வீடொன்றிலிருந்து பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண் மக்களால் துரத்திப் பிடிக்கப்பட்டார்.

அவருக்கு உதவிய ஆண் ஒருவரும் பிடிக்கப்பட்டு இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொண்டமானாறு அரசடியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றுக்குச் சென்ற பெண் ஒருவர், அங்கிருந்தவர்களை அழைத்து தன்னை பொதுச் சுகாதார பரிசோதகராக அறிமுகப்படுத்தி வெள்ள நிலமை தொடர்பில் ஆராய வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

அவர் கறுப்பு கோட் சூட் அணிந்திருந்துள்ளார். வீட்டின் சுற்றாடலில் தேங்கி நின்ற வெள்ளத்தை தனது அலைபேசியில் ஒளிப்படங்கள் எடுத்த அந்தப் பெண், ஆடை மாற்றுவதற்கு அறையைத் தருமாறு கேட்டுள்ளார்.

அதனால் அறை ஒன்றை வீட்டிலுள்ளவர்கள் வழங்கியுள்ளனர். அதற்குள் சென்று கதவைப் பூட்டிவிட்டு பெட்டகத்திலிருந்த 5 தங்கப்பவுண் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரங்கள் ஆகியவற்றை கொள்ளையிட்டு அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்த போது, பெட்டகத்திலிருந்த நகைகளைக் காணவில்லை. சம்பவம் தொடர்பில் ஊரவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஒன்றிணைந்து எல்லாத்திசைகளிலும் தேட ஆரம்பத்தனர்.

அதன்போது அந்தப் பெண் ஆண் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பலாலி பகுதியில் பயணித்த போது, அவர்கள் இருவரையும் துரத்திச் சென்றோர் மடக்கிப்பிடித்தனர்.

இருவரும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டனர். பெண்ணின் கைப்பையில் இருந்து பெருமளவு நகைகளும் தொலைகாட்டி (Telescope) ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நகைகள் கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்குகின்றார்.

இதேவேளை, அந்தப் பெண் வேறும் சில வீடுகளுக்குச் சென்று தன்னை கிராம அலுவலகர் எனக் கூறியுள்ளார் என்று ஊரவர்கள் தெரிவித்தனர்.

Previous Post Next Post