இலங்கையில் உள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் அறிவித்தல்!


கோவிட் - 19 அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாப் பயணிகள் பிரான்சிற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்குள் பிரான்ஸ் வழியாகச் செல்லும் இலங்கையர்கள், இலங்கை இராஜதந்திரிகள், மாணவர்கள், பிரான்சில் அவசர மருத்துவ சிகிச்சை பெற விரும்பும் இலங்கை நோயாளிகள், உயர்மட்ட விளையாட்டு வீரர்கள் மட்டுமே பிரான்சிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிட் - 19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிரான்ஸில் சிவப்பு பட்டியலிடப்பட்ட 16 நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பிரான்சிற்கு வருகை தர அனுமதிக்க கடுமையான நிபந்தனைகள் பொருந்தும் என்று தூதரகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரான்சிற்கு பயணிக்க வேண்டியவர்களுக்கு, அவர்கள் முதலில் விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர் அல்லது ஆன்டிஜென் பரிசோதனை செய்ய வேண்டும்.

அத்துடன், பிரான்ஸ் வந்தவுடன் கட்டாய ஆன்டிஜென் சோதனை, தடுப்பூசி போடாவிட்டால், பாதுகாப்புப் படையின் மேற்பார்வையின் கீழ் கட்டாய 10 நாள் தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி போடப்பட்டால், ஏழு நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

இதேவேளை, பிரான்ஸால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தடுப்பூசிகள் ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகள் ஆகும்.

எனினும், சீன மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளான சினோபார்ம் மற்றும் ஸ்பூட்னிக் ஆகியவை பிரான்சால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post