கனடாவில் வேகமாகப் பரவும் டெல்டா! மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் நிலை வரலாம் என எச்சரிக்கை!!


கனடாவில் ஆபத்தான டெல்டா திரிபு கொரோனா வைரஸ் வேமாகப் பரவிவரும் நிலையில் பாடசாலைகளை மீண்டும் மூட வேண்டிய கட்டாயம் இதனால் விரைவில் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்து வரும் கொவிட் தொற்று நோயாளர் தொகை மற்றும் பாடசாலைகளில் தொற்றுநோய் கட்டுபாடு குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லாமை என்பவற்றால் பிரச்சனைகள் ஏற்படும் என கனடிய மருத்துவ சங்கம் (CMA ) மற்றும் கனேடிய ஆசிரியர் கூட்டமைப்பு (CTF ) ஆகிய அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.

அதிக கொத்தணித் தொற்றுக்கள் ஏற்படக்கூடிய ஒரு களமாக பாடசாலைகள் மாறலாம் என கவலைப்படுவதாக கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கத்தரின் ஸ்மார்ட் தெரிவித்துள்ளார்.

டெல்டா திரிபு இப்போது கனடா முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. இது ஏனைய வகையை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிகளவானவர்கள் ஒன்றுகூடும் பாடசாலை போன்ற இடங்களில் டெல்டா மிக வேகமாகப் பரவக்கூடும் என டாக்டர் கத்தரின் ஸ்மார்ட் சுட்டிக்காட்டினார்.

டெல்டா திரிபு வரவிருக்கும் கல்வி ஆண்டில் தொற்றுநோய் அச்சுறுத்தலை மிகவும் மோசமாக்கலாம் என கனேடிய ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் சீன் ஹம்மண்ட் தெரிவித்தார். இந்த ஆசிரியர் கூட்டமைப்பில் நாடு முழுவதும் சுமார் 300,000 ஆசிரியர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஆகஸ்ட் 26 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் சுமார் 204,000 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 22 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஒரு வாரத்தில் முன்னர் வாரத்துக்கு 38 ஆயிரம் சிறுவர்கள் தொற்று க்குள்ளாகிப் பாதிக்கப்பட்ட நிலையில் இது ஆகஸ்ட் மாதத்தில் ஒரு வாரத்தில் 5 மடங்கு அதிகரிப்பாகும்.

அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் சிறுவர்களால் நிரம்பியுள்ளன. அங்கு நிலைமை கட்டுப்பாட்டை இழந்துவருகிறது.

கனடாவில் இப்போது நிலைமை மோசமடையவில்லை. கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஆனால் டெல்டா எங்கள் சிறுவர்கள் மத்தியில் தீவிரமாகப் பரவத் தொடங்கினால் சிக்கல்கள் உருவாகும் என கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கத்தரின் ஸ்மார்ட் தெரிவித்தார்.
Previous Post Next Post