லண்டனில் குடும்பத் தகராறு! இரு குழந்தைகளைக் கொலை செய்த தந்தை தற்கொலை முயற்சி!!

பிரித்தானியாவில் தமிழ்க் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட மோதலையடுத்து இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு லண்டனின் ஐல்போர்டில் இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இல்போர்ட் அலட்ப்றோ றோட் நோத்தில் உள்ள விநாயகன் ஸ்ரோரிற்கு மேல் இந்தக் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க நிதின்குமார் (நித்தி) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 வயது மகன், ஒரு வயது மகளே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

தனது வீட்டிற்கு அலுகில் உள்ள இன்னொரு தமிழ்க் கடையில் இவர் பணியாற்றினார். அந்தக் கடையின் உரிமையாளரான சண்முகம் தேவதுரை என்பவர், நித்தி தன்னிடம் பணியாற்றி அமைதியான நபர், இப்படி ஏன் நடந்து கொண்டார் எனத் தெரியவில்லை என பிரித்தானிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

எல்லாம் சாதாரணமானது, நித்தி ஒரு அற்புதமான மனிதர். விசுவாசமான தொழிலாளி. அவர் காலை 9 மணிக்கு கடையைத் திறந்தார். ஒரு சாதாரண நாள் வேலை செய்தார். அவர் புறப்படுவதற்கு சற்றுமுன்பு எனக்குத் தேநீர் கொடுத்தார் என்றார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கடையிலிருந்து புறப்பட்டுள்ளார். மாலை 5.30 மணிக்குக் கொலை நடந்துள்ளது. சிறுவன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தான். சிறுமி வீட்டிலேயே உயிரிழந்தாள்.

நித்தி பணிபுரிந்த தமிழ் வர்த்தக நிலையம்
சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகில் வசிக்கும் ரேஷ்னா பேகம் என்ற பெண், குழந்தைகளின் தாய் சித்திரவதை செய்யப்பட்டதைப் போல் அலறியதாகக் குறிப்பிட்டார்.

விநாயகன் ஸ்டோர்ஸ_க்கு மேலே நான்கு பிளாட்டுகள் இருந்ததாகவும் அதில் ஒன்றில் அவர்கள் குடியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனக்கு உதவுங்கள் என்று ஒரு பெண் அலறுவதைக் கேட்டேன். அவள் சித்திரவதை செய்யப்பட்டதைப் போலிருந்தது. பயங்கரமான ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அது சுமார் 10 நிமிடங்கள் நீடித்தது என்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுவனை வெளியே தூக்கி வந்து சிபிஆர் இயந்திரத்தின் மூலம் இதயத்தை இயக்க முயற்சித்துக் கொண்டிருந்ததாக அயலவர் ஒருவர் தெரிவித்தார்.

மூவரின் உடலிலும் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. இது தொடர்பில் வெளியார் யாரையும் தேடவில்லை, குடும்பத்துக்குள்ளேயே கொலைச் சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 


Previous Post Next Post