யாழில் தொலைபேசிக்காக முதியவரைக் கொலை செய்த இரு இளைஞர்கள் கைது!!

நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்து வந்த முதியவரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் வரும் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

யாழ்ப்பாணம், நல்லூர் யமுனா ஏரி வீதியில் தனிமையில் வசித்த முதியவரின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) சென்ற இளைஞர்கள் இருவர், அங்கு பப்பாப்பழம் பறிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களை பப்பாப்பழம் பறிக்க முதியவரும் அனுமதித்திருந்தார். பப்பாப்பழம் பறித்துவிட்டதாக முதியவரிடம் தெரிவித்த இளைஞர்கள் இருவரும் அவரது அலைபேசியைத் தருமாறு கோரியுள்ளனர். எனினும் தர மறுத்த முதியவரிடமிருந்து அலைபேசியைப் பறித்து எடுத்த இருவரும் அவரை தள்ளி வீழ்த்திவிட்டுத் தப்பித்துள்ளனர்.

சம்பவத்தையறிந்த அயலவர்கள் முதியவரின் உடல்நிலை அறிந்து அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். எனினும் முதியவர் சிசிக்சை பயனின்றி மறுநாள் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தில் முதியவரின் உயிழப்புக்குக் காரணமான இளைஞர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் வைத்து பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் பின்னர் அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரணை செய்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல்இ சந்தேக நபர்கள் இருவரையும் வரும் ஜூன் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சாட்சிகளை அழைத்து அடையாள அணிவகுப்பை நடத்துமாறும் அறிவுறுத்தினார்.
Previous Post Next Post