குடியேற்றவாசிகளுடன் சேர்ந்து பிரான்சுக்குள் நுழையும் தீவிரவாதிகள்!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அயல் நாடுகளுடனான பிரான்ஸின் எல்லைகளில் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று அதிபர் மக்ரோன் இன்று தெரிவித்திருக்கிறார்.

குடியேற்றவாசிகளோடு சேர்ந்து பயங்கரவாதிகளும் நாட்டுக்குள் நுழைய முடியும் என்பதால் எல்லைகளில் தீவிர கண்காணிப்பு அவசியம் என்றும்-சோதனைகளைப் பலப்படுத்துவதற்காக எல்லைக் காவல் படையினரது எண்ணிக்கை 4ஆயிரத்து 800 ஆக அதிகரிக்கப்படும் என்றும்-அவர் அறிவித்திருக்கிறார். 

உள்துறை அமைச்சருடன் இணைந்து இன்று பிரான்ஸ் - ஸ்பெயின் எல்லைப் பகுதிக்கு விஜயம் செய்த மக்ரோன், அங்கு இரு நாடுகளினதும் எல்லைக் காவல் படை மற்றும் சுங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

ஸ்பெயினுடனான எல்லையில் பிரதான வாகன நுழைவிடமான பேர்த்துஸ் கடவை(Perthus pass - Pyrénées-Orientales) பகுதிக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் அங்கு செய்தியாளர்களுடன் பேசினார்.

வட ஆப்பிரிக்காவில் இருந்து வரும் குடியேற்றவாசிகள் இந்தத் தெற்கு எல்லைக் கடவை ஊடாகவே பிரான்ஸினுள் நுழைகின்றனர்.

கொரோனா வைரஸ் பொது முடக்க காலப்பகுதியில் குடியேற்றவாசிகளது படையெடுப்பு அதிகரித்துள்ளது என்று எல்லைக்காவல் படை அதிகாரிகள் அங்கு வைத்து மக்ரோனிடம் தெரிவித்தனர்.

ஷெங்கன் (Schengen) உடன்படிக்கையின் கீழ் 26 ஜரோப்பிய நாடுகளுக்கு இடையே எவரும் கட்டுப்பாடுகள், சோதனைகள் ஏதுமின்றிப் பயணம் செய்வதற்கு தற்போது அனுமதி உள்ளது.

ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஷெங்கன் எல்லைப் போக்குவரத்துகளை ஆழமான மறு ஆய்வுக்கு உட்படுத்தும் யோசனை ஒன்றை அடுத்த மாதம் ஜரோப்பிய ஒன்றியத்திடம் முன்வைக்கப் போவதாக மக்ரோன் தெரிவித்தார்.

பிரான்ஸில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எல்லைப்பகுதி கண்காணிப்பு மற்றும் புலனாய்வுப் பலவீனங்களும் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நீஸ் நகரில் தேவாலயம் ஒன்றுக்குள் மூவரைப் படுகொலைசெய்த இஸ்லாமியத் தீவிரவாத இளைஞர், அக் கொலைகளைப் புரிவதற்காகவே துனிசியாவில் இருந்து நாடுகடந்து இத்தாலி வழியாக பிரான்ஸ் வந்திருக்கிறார் என்பது விசாரணைகளில் தெரியவந்திருக்கிறது.
Previous Post Next Post