பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தைத் தற்காலிகமாக நிறுத்தக் கோரிக்கை!


நாட்டில் நிலவும் கோவிட் நிலமை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், தற்போதைய பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, சீரற்ற காலநிலை காரணமாகவும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கான மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளை கருத்திற் கொள்ளாது ஜுன் 11 க்கு முன்னர் விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு தமது சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த விண்ணப்பத்தை தற்காலிகமாக நிலமை சீரடையும் வரை நிறுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை முன்வைத்து கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.

அத்தோடு, ஜுன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டின் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு்ளளதாகவும், மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் குறிப்பிட்டளவிலானோர் சிகிச்சை நிலையங்களில் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளதாகவும் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது.

அத்தோடு, ஒன்லைனில் விண்ணப்பத்தை நிரப்ப பல கிராமப்புறப் பிரதேசங்களில் தொலைத் தொடர்பு சாதனங்கள் இல்லை என்பதோடு இணைய வசதிகளையும் பெற்றுக் காெள்ள முடியாதுள்ளனர். எனவே இவற்றின் காரணமாக பல மாணவர்கள் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.

மாணவர்களும் பெற்றோர்களும் இவ்வாறு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு்ளள இந்நேரத்தில் மிக அவசரமாக விண்ணப்பம் கோரி, மிக அவசரமாக விண்ணப்ப முடிவுத் திகதியை அறிவிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு என்ன தேவை உள்ளது என்பதை தாம் அறிந்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post