பாயினால் சுற்றப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் கிணற்றுக்குள் சடலம்! (படங்கள்)


கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்றபோது,

கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற குற்றவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கிணற்றினை அண்மித்த பகுதியில் சில தடயங்கள் காணப்படுவதாலும் சடலம் பாயினால் சுற்றிக்காணப்படுவதாலும் மரணம் கொலை என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரியவருகிறது.

நாளைய நாள் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவருகிறது.

குறித்த சடலம் சில நாட்களுக்கு முன்னர் போடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் சடலம் ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றார். 

Previous Post Next Post