மன்னார் பிரதேச சபை தவிசாளரின் பதவி பறிப்பு! அதிகார முறைகேடு குற்றம் உறுதியானதால் ஆளுநர் அதிரடி!!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிரின் தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்து வடக்கு மாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் அரசிதழ் வெளியிட்டுள்ளார்.

இந்த பணிப்புரை இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் பதவியின் பணிகள் மற்றும் கடமைகளின் போது குற்றங்களைப் புரிந்தார் என்பது விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள நிலையில் அவரது தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நல்லாட்சி அரசின் காலத்தில் முன்னாள் ரிஷாத் பதியூதினின் தலைமன்னார் பண்ணையில் பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரமும் பெட்டியும் மாடு கடத்தல் வழக்கில் தலைமன்னார் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டது.

மன்னார் நீதிவான் நீதிமன்றில் உழவு இயந்திரம் மற்றும் பெட்டியும் தடுத்துவைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தின் உதவியுடன் அவை பிரதேச சபைக்கு வழங்கப்பட்டவை என கடிதம் பெறப்பட்டு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படதற்கு அமைய உழவு இயந்திரமும் பெட்டியும் விடுவிக்கப்பட்டன.

எனினும் அந்த உழவு இயந்திரமும் பெட்டியும் பி்ரதேச சபையினால் பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டு மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களினால் விசாரணை கோரப்பட்டது.

நீண்ட இழுபறிக்குப் பின் முன்னாள் மாவட்ட நீதிபதி கந்தையா அரியநாயகம் முன்னிலையில் நடைபெறும் தனிநபர் குழுவை வடக்கு மாகாண ஆளுநர் நியமித்திருந்தார்.

முன்னாள் நீதிபதி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் பல தரப்பட்டவர்களிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. அதன் நிறைவில் விசாரணை அறிக்கை வடக்கு மாகாண ஆளுநரிடம் ஓகஸ்ட் 2ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையில் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டப்பிரிவு உப பிரிவு 185 (1) (இ),(அ) ஆகிய பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட அதிகார மீறல் குற்றத்தை மன்னார் பிரதேச சபை தவிசாளர் சாகுல் கமீது முகம்மது முஜாஹிர் இழைத்துள்ளார் என குறிப்பிடப்பட்டது.

அதனடிப்படையில் அவர் பதவி நாளை தொடக்கம் பதவி நீக்கப்படுகிறார் என வடமாகாண ஆளுநர் அரசிதழ் ஊடாக பணித்துள்ளார்.

Previous Post Next Post