பிரித்தானியாவில் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் குடும்பம்!


புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளும் இலங்கைத் தமிழரான விஞ்ஞானி ஒருவர் பிரிதானியாவிலிருந்து குடும்பத்துடன் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளார்.

இலங்கையில் சித்திரவைதைகளை எதிர்கொண்ட அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர் நடராஜா முகுந்தன் (47) கடந்த 2018 -ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து சென்றார்.

அவருடன் அவரது மனைவி சர்மிளா (42), மற்றும் அவர்களின் 13, 09 மற்றும் 05 வயதான 03 பிள்ளைகளும் சென்றிருந்தனர்.

புலமைப்பரிசில் பெற்று சென்ற முகுந்தன் 2 வருடங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அவரது மனைவி சர்மிளா பிரித்தானியாவில் முதியோர் இல்லமொன்றில் முதியவர்களைப் பராமரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். நவம்பர் 2019 இல் இலங்கையில் நோய்வாய்ப்பட்ட தனது தாயைப் பார்க்க குறுகிய விடுமுறையில் முகுந்தன் இலங்கை வந்தார். இதன்போது கைது செய்யப்பட்ட அவர், துன்புறுத்தப்பட்டார். பின்னர் இலங்கையில் இருந்து ஒருவாறு தப்பி இங்கிலாந்து சென்ற அவா், இலங்கையில் அனுபவித்த கொடூரங்கள் காரணமாக நாட்டுக்குத் திரும்ப அஞ்சி அங்கு புகலிடம் கோரி விண்ணப்பித்தார்.

2020- பெப்ரவரியில் புலமைப்பரிசில் உதவித்தொகை முடிவுக்கு வந்த பின்னர் டாக்டர் நடராஜா முகுந்தன் மற்றும் அவரது மனைவி சர்மிளா ஆகியோர் பிரித்தானியாவில் தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் இவ்வாண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி இவர்களது புகலிடக் கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி வந்த மற்றொரு மின்னஞ்சலில் இவா்கள் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

டாக்டர் நடராஜா முகுந்தன் பிரிஸ்டலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 03 பிள்ளைகளும் அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வந்தனர்.

நடராஜா முகுந்தன் தம்பதியரின் மூத்த மகள் கிஹானியா 100% வருகையுடன், பாடசாலையில் சிறந்த அடைவு மட்டத்தையும் பெற்றார். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் அவர் மிகச் சிறந்த புள்ளிகளைப் பெற்றமைக்காக பாடசாலையில் பாராட்டுப் பெற்றார். எதிர்காலத்தில் மருத்துவராக வர வேண்டும் என்பதே தனது விருப்பம் என கிஹானியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரிட்டனில் தங்குமிட அனுமதி நிராகரிக்கப்பட்டதை அடுத்து கடந்த மாதம் பிரிஸ்டலில் வசித்து வந்த வீட்டில் இருந்து டாக்டர் நடராஜா முகுந்தன் குடும்பத்தினருடன் பிரித்தானியா உள்த்துறை அலுவலகத்தால் ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டார்.

இதனால் அவர்களது 03 பிள்ளைகளும் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலை நிலை ஏற்பட்டது. எனினும் ஒருவாறு இளையவர்களான இரு பிள்ளைகளும் தற்போதுவரை தமது பாடசாலைக் கல்வியைத் தொடருகின்றபோதும் கிஹானியாவுக்கு அந்த சந்தா்ப்பம் மறுக்கப்பட்டு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஹோட்டலில் அடைந்து கிடப்பது மிகவும் சலிப்பாக இருக்கிறது. இது ஒரு சிறைச்சாலை போன்று உள்ளது என தி கார்டியனிடம் கிஹானியா தெரிவித்துள்ளார்.

நான் பாடசாலைக்குச் செல்ல விரும்புகிறேன். சில நேரங்களில் நான் எனது பாடசாலை சீருடையை அணிந்துகொண்டு வீதியில் போய் நிற்கிறேன் என அவா் கூறினார்.

முகுந்தனின் புலமைப்பரிசில் விசா முதன்முதலில் காலாவதியானபோது, அவரது மனைவி சர்மிளா பணியாற்றிய பராமரிபரிப்பு மையத்தின் முகாமையாளர் அவரை தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு கோரி உள்த்துறை அலுவலகத்திற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பினார். எங்களுக்கு பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இந்நிலையில் திருமதி சர்மிளா முகுந்தன் தொடர்ந்தும் எங்கள் பராமரிப்பு மையத்தில் பிணியாற்றுவதற்கு அனுமதிக்குமாறு அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் புகலிடக் கோரிக்கையை முன்வைத்து ஒரு வருடம் கழித்து, முகுந்தன் தற்காலிகமாகப் பணியாற்ற உள்துறை அலுவலகம் அனுமதி வழங்கியது. அவர் நிபுணத்துவம் பெற்ற துறையில் பணியாளர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு இந்த அனுமதி கிடைத்தது.

எனினும் பல்கலைக்கழக ஆராய்ச்சி பணிகளுக்கு விண்ணப்பித்த போதிலும், அவருக்கு இங்கிலாந்து வதிவிட உரிமை இல்லை என்பதால் அவரை பணிக்கமர்த்த யாரும் முன்வரவில்லை.

இதேவேளை, இந்தக் குடும்பத்தினரின் நிலை குறித்து அவா்கள் வசித்து வந்த வெஸ்டன்-சூப்பர்-மேர் (Weston-super-Mare) தொகுதி கன்சர்வேடிவ் எம்.பி. கடந்த ஒக்டோபர் -01 உள்துறை செயலர் பிரிதி பட்டேலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இங்கிலாந்து குடிவரவு துறை தாமதமின்றி, துரிதமாகவும் சரியாகவும் இவா்களின் விடயத்தைக் கையாண்டால் இவா்களின் புகலிட கோரிக்கை நிராகரிப்பு தவிர்க்கப்படக்கூடியது போன்று தெரிகிறது என அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமாக உள்ள நிலையில் ஏற்கனவே துன்புறுத்தலை எதிர்கொண்ட நடராஜா முகுந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளமை குறித்து அவா்களின் வழக்கறிஞர் நாக கந்தையா கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், நீதித்துறை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்புக்கள். மிரட்டல்கள் தொடர்கின்றன என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையர் மிச்சேல் பச்லெட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவா் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிக்கும் மதத் தலைவர்கள் ஆகியோர் மீதான கண்காணிப்பு, மிரட்டல்கள் குறித்தும் ஐ.நா. மனித உரிமைகள்ட பேரவை ஆணையாளரின் கவலைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்ட பிரித்தானிய உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர், அனைத்து புகலிடக் கோரிக்கைகளும் எங்கள் சர்வதேச கடப்பாடு மற்றும் விண்ணப்பதாரிகளின் தனிப்பட்ட தகுதிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post